பிரதமர் மோடி 
உள்ளூர் செய்திகள்

செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு புதிய கட்டிடம்- பிரதமர் மோடி 12-ந் தேதி திறந்து வைக்கிறார்

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய கட்டிடத்தை வரும் 12-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக திறந்துவைக்க உள்ளார்.

மாலை மலர்

சென்னை:

சென்னை பெரும்பாக்கத்தில் ரூ.24.65 கோடி மதிப்பில் 70,000 சதுர அடி பரப்பில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு முதல் தரமணியில் தற்காலிக கட்டிடத்தில் செயல்பட்டு வந்த செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு நிரந்தர கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டு, கடந்த 2017-ம் ஆண்டு முதல் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது 70,000 சதுர அடியில் பிரம்மாண்ட கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய கட்டிடத்தை வரும் 12-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக திறந்துவைக்க உள்ளார்.

சென்னையில் இதற்கான நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பார் என தெரிகிறது.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் முதுகலை, முனைவர், முனைவர் பட்ட மேலாய்வு உள்ளிட்டவற்றில் செம்மொழித் தமிழைக் கற்கவும், ஆராய்ச்சி மேற் கொள்ளவும் தேவையான வாய்ப்புகளை உருவாக்குதல், ஆய்வு நூல்களை பதிப்பித்து வெளியிடுதல், பழந்தமிழ் நூல்களை பிற மொழிகளில் மொழிபெயர்த்து தமிழ் மொழியின் செழுமையை உலகறியச் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிறுவனத்தில் 50-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வரும் நிலையில், மின்னனு நூலகம், இலக்கியம், மொழியியல், மொழிபெயர்ப்பு, அகராதியியல், நாணயவியல் உள்ளிட்ட 12 புலங்களுடன் புதிய கட்டடம் தயாராகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... பிரதமர் பாதுகாப்பு குளறுபடி வழக்கு - விசாரணை குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம்