குப்பைகள் எரிக்கப்பட்டு புகை மூட்டமாக காணப்படும் காட்சி. 
உள்ளூர் செய்திகள்

மூச்சுத்திணறலால் பொது மக்கள் அவதி

மதகடிப்பட்டு நரிக்குறவர் குடியிருப்பு அருகில் குப்பைகள் கொட்டி எரிப்பதால் மூச்சுத்திணறலால் பொது மக்கள் அவதிப்பட்டனர்.

மாலை மலர்

புதுச்சேரி:

புதுவை மதகடிப்பட்டு சந்தைந்தோப்பு எதிரில் நரிக்குறவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு இடம் ஒதுக்கி, பட்டா அளித்து வீடு கட்ட மானியமும் வழங்கியுள்ளது. 

அப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு சாலை வசதி செய்யவும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. நரிக்குறவர் குடியிருப்பு அருகில் ஊரல்குட்டை என்ற குளம் உள்ளது. 

இந்த குளத்தை சுற்றிலும் திருபுவனை பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுகிறது. 

இதற்கு அப்பகுதியை சுற்றியுள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மறியல் உட்பட பல போராட்டங்களை நடத்தியுள்ளனர். ஆனாலும் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. குப்பைகள் அதிகமாகும்போது தீ வைத்து விடுகின்றனர். 

அதேபோல இன்றும் அதிகாலை குப்பையில் தீ வைத்தனர். இதனால் அப்பகுதியை சேர்ந்த மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அருகில் தனியார் சோப் தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு பணியாற்றும் ஊழியர் மூச்சுதிணறலால் மயங்கி விழுந்தார். அவருக்கு திருபுவனை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. 

ஏற்கனவே நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என பிரதமர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இச்சூழலில் நீர்நிலையில் குப்பையை கொட்டுவதும், அதற்கு தீ வைப்பதும் அப்பகுதி மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் வசிப்பிடம் இல்லாத வேறு இடத்தில் குப்பையை கொட்டி அழிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.