தேனி:
தேனி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மருத்துவம் மற்றும் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நடத்துவது குறித்து மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் கலெக்டர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.
இளம்பிள்ளை வாதம் என்ற போலியோ நோயினை ஒழிக்கும் வகையில் நாடு முழுவதும் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஒவ்வொரு வருடமும் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்த வகையில் நாடு முழுவதும் 27&ந்தேதி காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் வழங்கப்பட உள்ளது. தேனி மாவட்டத்தில் 823 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு 1,02,000 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், ஊட்டச்சத்து மையங்கள், பஸ் நிலையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். இம்முகாம் நடைபெறுவதற்காக பொது சுகாதாரம், மருத்துவம், ஊட்டச்சத்து துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சார்ந்த 3,586 ஊழியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
மலைவாழ் பகுதிகளில் வாழும் பொதுமக்கள் மற்றும் பழங்குடியினரின் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்குவதற்காக 12 நடமாடும் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நகர்புற குடிசை பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தும் வகையில் தனி குழுக்கள் அமைக்கப்பட்டு அனைத்து குழந்தைகளும் போலியோ சொட்டு மருந்து பெறுவதை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
எனவே தங்களின் 5 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுத்து பயன்பெறவும் இனிவரும் காலங்களில் போலியோ என்னும் இளம்பிள்ளை வாதநோய் இல்லாத சமுதாயம் ஏற்படுத்திட அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.