உள்ளூர் செய்திகள்

காசிமேடு மீன்மார்க்கெட்டில் பரபரப்பு: ரவுடியை ஓட ஓட விரட்டி வெட்டிய 7 பேர் கும்பல்

மீன்பிடி துறைமுகத்தில் இருந்த மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சூர்யாவிற்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ராயபுரம்:

எர்ணாவூர், நேதாஜி நகரை சேர்ந்தவர் சூர்யா என்கிற கேரளா சூர்யா (வயது 22).ரவுடி. இவர் மீது கொலை உள்பட மொத்தம் 7 வழக்குகள் உள்ளன.

இந்நிலையில் நேற்று இரவு சூர்யா காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஏலம் விடும் இடத்திற்கு வந்தார்.

அப்போது பின் தொடர்ந்து வந்த 7 பேர் கும்பல் திடீரென கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அவரை சுற்றி வளைத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சூர்யா அவர்களிடம் இருந்து தப்பிக்க ஓடினார்.

ஆனால் மர்ம கும்பல் அவரை ஓட, ஓட விரட்டி சரமாரியாக வெட்டினர். இதில் தலை, கழுத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த சூர்யா ரத்த வெள்ளத்தில் சரிந்தார். உடனே மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

இதனை கண்டு மீன்பிடி துறைமுகத்தில் இருந்த மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து காசிமேடு மீன்பிடி துறைமுக போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடிய சூர்யாவை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சியை வைத்து மர்ம கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT