உள்ளூர் செய்திகள்

திருவெண்ணைநல்லூர் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்த மூதாட்டி

திருவெண்ணைநல்லூர் அருகே மர்மமான முறையில் மூதாட்டி இறந்து கிடந்தார்.பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம்:

திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள காந்தளவாடியில் பெரிய ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியின் அருகில் சித்தானங்கூர் தனியார் ஆன்மீக மையம் அருகில் 50 வயது மதிக்கத்தக்க பெண் உடல் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. இதனை இன்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து அந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர் ரங்கநாதனுக்கு தகவல் தெரிவித்தனர். கிராம நிர்வாக அலுவலர் இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார் ? எந்த ஊரை சேர்ந்தவர் ? யாரேனும் இவரை கொலை செய்து விட்டு இங்கே போட்டு விட்டு சென்றார்களா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

SCROLL FOR NEXT