ஓ பன்னீர்செல்வம் 
உள்ளூர் செய்திகள்

பட்டாசு ஆலைகளில் விபத்தை தடுக்க உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

பட்டாசுத் தொழிற்சாலைகளில் அடிக்கடி விபத்துக்கள் நடப்பதால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுத்து நிறுத்த முனைப்பான நடவடிக்கைகளை எடுக்குமாறு முதலமைச்சருக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாலை மலர்

சென்னை:

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பசித்தவனுக்கு மீனை உண்ணக் கொடுப்பதைவிட மீன்பிடிக்கக் கற்றுக் கொடுப்பதே சிறந்தது என்ற பழமொழிக்கேற்ப, இழப்பீடை வழங்குவதை விட தொழிலாளர்களின் உயிரைக் காப்பதேசிறந்தது என்ற அடிப்படையில் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தைச் சேர்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பட்டாசுத் தொழிலில் பணிபுரிவோர் எதிர்பார்க்கின்றனர்.

பட்டாசுத் தொழிற்சாலைகளில் ஏற்படும் பெரும்பாலான விபத்துகள் மருந்துக்கலவையின் போது தான் ஏற்படுகிறது. இதுபோன்ற விபத்தினைத் தடுக்க தொழிலகப்பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தைச் சேர்ந்த பொறியாளர்கள் பட்டாசுத் தொழிற்சாலைகளுக்கு மூன்று மாதத்திற்கு ஒரு முறை சென்று, மருந்துக்கலவை மேற்கொள்ளும் பணி தகுதி வாய்ந்தவர் முன்னிலையில் நடைபெறுகிறதா என்பதையும், அந்தப்பணியை செய்யும் போது மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடைபிடிக்கப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்து, பட்டாசு தொழிற்சாலை நிறுவனங்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்க வேண்டும். ஆனால், அவ்வாறு முறையாக செய்யப்படுவதாகத் தெரியவில்லை. அதனால்தான் இதுபோன்ற விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகின்றன.

இதுகுறித்து நான் பலமுறை அறிக்கை வெளியிட்டும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. எனவே, முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, பட்டாசுத் தொழிற்சாலைகளில் அடிக்கடி விபத்துக்கள் நடப்பதால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுத்து நிறுத்த முனைப்பான நடவடிக்கைகளை எடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்க வேண்டுமென்று அ.தி.மு.க. சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்...ஆசிரியரை கடுமையாக தாக்க முயன்ற மாணவர் அதிரடி சஸ்பெண்ட்