அறுவடைக்கு தயாராக உள்ள மஞ்சள் குலைகள். 
உள்ளூர் செய்திகள்

நெல்லையில் விற்பனைக்கு தயாராகும் மஞ்சள் குலைகள்- மண் அடுப்புகள்

பொங்கல் பண்டிகையொட்டி நெல்லை மாவட்டத்தில் மஞ்சள் குலைகள், மண் அடுப்புகள் விற்பனைக்காக தயாராகி வருகின்றன.

மாலை மலர்

நெல்லை:

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை அடுத்த வாரம் கொண்டாடப்படுகிறது. இதற்காக விவசாயிகளும் வியாபாரிகளும் இப்பொழுதே தங்களை தயார்படுத்தி வருகிறார்கள்.

பொங்கல் பண்டிகையின் பிரதானமாக மஞ்சள், கரும்புகள் இருக்கும். சிவகிரி மற்றும் தேனி பகுதியில் இருந்து பொங்கல் பண்டிகைக்கு தேவையான கரும்புகள் ஏற்கனவே அறுவடை செய்யப்பட்டு நெல்லை பகுதியில் பல்வேறு இடங்களில் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது. 

நெல்லை பகுதியில் அதிகமாக மஞ்சள் விளைவிக்கப்படுகிறது.நெல்லை அருகன்குளம், மூன்றடைப்பு, அம்பை மற்றும் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் ஏராளமாக மஞ்சள் பயிரிட்டுள்ளார்கள். தற்போது மஞ்சள் செடி நன்றாக வளர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.

இதுபோல பொங்கல் விற்பனைக்காக காய்கறி விவசாயிகளும் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளார்கள். ஏராளமான வாழைக்காய், கத்தரிக்காய், தக்காளி மற்றும் கிழங்கு வகைகள் போன்றவைகளும் அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளது. 

சமீபத்தில் கத்தரிக்காய், தக்காளி பழம் விலைகள் மிகவும் அதிகரித்து உச்சத்தில் காணப்பட்டது. ஆனால் பொங்கல் பண்டிகை நெருங்கும் நேரங்களில் தக்காளி விலை  குறைந்து உள்ளது. 

தென் மாவட்டத்தின் புகழ்பெற்ற பனங்கிழங்கு விற்பனை இப்பொழுதே மும்முரமாக தொடங்கி யுள்ளது.

பொங்கல் விடுவதற்காக மண் பானைகள், மண் அடுப்புகள் நெல்லை குறிச்சி மற்றும் வீரவநல்லூர் பகுதியில் ஏராளமாக தயார் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

நெல்லை டவுன் ரத வீதிகளிலும் ஏராளமான மண் பானைகள், மண் அடுப்புகள் விற்பனைக்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. பொங்கல் பண்டிகைக்காக பனை ஓலைகளை இப்பொழுது அறுவடை செய்து அதை காயவைத்து வருகிறார்கள்.

வியாபாரிகளும் பொங்கல் பண்டிகைக்காக இந்த ஆண்டு அதிக பொருட் கள் விற்பனை செய்ய இப்போதே களம் இறங்கி உள்ளார்கள்.