கோப்புப்படம் 
உள்ளூர் செய்திகள்

நெல்லை ஆஞ்சநேயர் கோவில்களில் அனுமன் ஜெயந்தி சிறப்பு வழிபாடு

அனுமன் ஜெயந்தியையொட்டி நெல்லை ஆஞ்சநேயர் கோவில்களில் இன்று நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளானோர் கலந்து கொண்டனர்.

நெல்லை:

அனுமன் ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நெல்லை பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றது.

நெல்லை அருகே உள்ள அருகன்குளம் காட்டு ராமர் கோவிலில் காலை 9 மணிக்கு கும்பம் வைத்து ஹோமம் நடைபெற்றது. பின்னர் அபிஷேகம், செண்டை மேளம் முழங்க பரத நாட்டியம் நிகழ்ச்சியும் நடந்தது. 

பிற்பகலில் மகா தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. எட்டெழுத்து பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. 

நெல்லை அருகே உள்ள ராஜவல்லிபுரம் ஓம் சக்தி ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை, அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதைப்போல் நெல்லை பகுதியில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர், கெட்வெல் ஆஞ்சநேயர் உள்ளிட்ட கோவில்கள் மற்றும் பெருமாள், ராமர் கோவில்களில் உள்ள ஆஞ்சநேயர் சன்னதிகளிலும் அனுமன் ஜெயந்தி விழா பூஜைகள் நடைபெற்றது.

அனுமன் ஜெயந்தியை யொட்டி இன்று பல்வேறு கோவில்களில் தரிசனத் திற்காக பொதுமக்கள் திரண்டனர். அப்போது அவர்கள் முககவசம் அணிந்தவாறும், சமூக இடைவெளியை பின்பற்றியவாறும்  வழிபட்டு சென்றனர்.