உள்ளூர் செய்திகள்

விக்கிரவாண்டி அருகே பி.எஸ்.சி. படித்து விட்டு மருத்துவம் பார்த்த போலி டாக்டர் கைது: கடலூர் சிறையில் அடைப்பு

விக்கிரவாண்டி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவ அலுவலர் ரகுநாத் அங்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். சொந்தமாக மருந்தகமும் நடத்தி வந்தது ஆய்வில் தெரியவந்தது.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுக்கா திண்டிவனம் வட்டம் பெரியதச்சூரில் போலி டாக்டர் கிளினிக் வைத்து சிகிச்சை அளித்து வருவதாக புகார்கள் வந்தன. இதனை அடுத்து விக்கிரவாண்டி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவ அலுவலர் ரகுநாத் அங்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது விழுப்புரம் அண்ணாமலை நகரைச் சேர்ந்த செல்வசேகர் (வயது 51) என்பவர் கிளினிக் வைத்து பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்ததை கண்டார். உடனடியாக உள்ளே சென்ற டாக்டர் ரகுநாத் அவரிடம் விசாரணை நடத்தினார். இதில் அவர் எம்.பி.பி.எஸ்., படிக்காமல் பி.எஸ்.சி. படித்து விட்டு பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்தது தெரியவந்தது.

மேலும், இவர் சொந்தமாக மருந்தகமும் நடத்தி வந்தது ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து டாக்டர் ரகுநாத், இது குறித்து பெரிய தச்சூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக முருகன் வழக்குப்பதிந்து போலி டாக்டர் விழுப்புரம் அண்ணாமலை நகரைச் சேர்ந்த செல்வசேகரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த போலி டாக்டர் இது போல பல முறை கைதாகி, ஜாமினில் வந்து மீண்டும் கிளினிக் நடத்தி வருகிறார். எனவே, இவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.