உள்ளூர் செய்திகள்

இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை-ஆர்.டி.ஓ. விசாரணை

நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

மாலை மலர்

பரமத்திவேலூர்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் பகுதியை சேர்ந்தவர் மோகன்( 25 ).இவரது மனைவி ராஜகுமாரி(22).இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் ஆனது.  இருவரும் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள கொத்தமங்கலத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவரது வெல்லம் தயாரிக்கும் ஆலையில் கரும்பு வெட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர். 

இந்நிலையில் ராஜகுமாரிக்கும், மோகனுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் விரக்தியில் இருந்த ராஜகுமாரி நேற்று இரவு சுமார் 7 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத போது அங்கு இருந்த கொட்டகையில் விட்டத்தில் தூக்குப்போட்டுக் கொண்டார்.

 வெளியிலிருந்து வந்த கணவர் மோகன் அவரை மீட்டு நாமக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை 6 மணிக்கு உயிரிழந்தார். 

இது குறித்து ஜேடர்பாளையம் போலீசில் புகார் செய்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜகுமாரிக்கு திருமணமாகி ஒன்றரை வருடங்கள் ஆனதால் வரதட்சனை கொடுமையால் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என திருச்செங்கோடு கோட்டாட்சித் தலைவர் இளவரசி விசாரணை நடத்தி வருகிறார்.