பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள ஆனங்கூர் கிராமத்தில் தமிழக அரசின் சிறப்பு திட்டமான கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
முகாமில் கன்றுகள் மற்றும் ஆடுகளுக்கு குடற்புழு நீக்க மருந்துகளை அளித்தல், சினை பிடிக்காத கால்நடைகளுக்கு சிறப்பு மலடு நீக்க சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
சினைபருவத்தில் உள்ள பசு மற்றும் எருமைகளுக்கு செயற்கை முறை கருவூட்டல் செய்யப்பட்டன. முகாமில் 50 கால்நடைகளுக்கு ஊட்டச்சத்து தாதுஉப்பு கலவைகள் வழங்கப்பட்டன.
சிறந்தமுறையில் கன்றுகள் பராமரிப்போருக்கு சிறப்பு பரிசுகள் மற்றும் சிறந்த முறையில் கால்நடை வளர்ப்பு முறைகளை கையாளும் முன்னோடி கால்நடை வளர்க்கும் சிறந்த கால்நடை விவசாயிகளுக்கு சிறப்பு மேலாண்மை விருதுகள் வழங்கப்பட்டன.
முகாமில் 500-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், தடுப்பூசி மற்றும் இதர சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.