ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள களங்கானி பகுதியிலிருந்து மரவள்ளி கிழங்கு ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று இன்று காலை ராசிபுரத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த டிராக்டரை ராசிபுரம் அருகே உள்ள கட்டனாச்சம்பட்டி அண்ணாநகர் பகுதியை சேர்ந்த பெருமாள் (வயது 45) என்பவர் ஓட்டினார்.
ராசிபுரம் அருகே உள்ள சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பாச்சல் அருகே உள்ள தனியார் கல்லூரி அருகில் சென்றபோது டிராக்டரின் டிரெயிலர் திடீரென கழன்றது.
இதை டிரைவர் பெருமாள் திரும்பி பார்த்ததாக கூறப்படுகிறது. அப்போது டிராக்டர் நிலைதடுமாறி சாலையில் உள்ள சென்டர் மீடியனில் பயங்கரமாக மோதி கவிழ்ந்தது. இதில் டிரைவர் பெருமாள் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இந்த நிலையில் மார்த்தாண்டத்தில் இருந்து பெங்களூர் நோக்கி அந்த வழியாக சென்ற அரசு விரைவு சொகுசு பஸ் மீது டிராக்டரில் இருந்து கழன்ற ட்ரெய்லர் வேகமாக மோதியது.
இந்த விபத்தில் மார்த்தாண்டத்தை சேர்ந்த பஸ் டிரைவர் சந்தோஷ் குமார் (44), கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஆரோக்கிய ஜெனிபர் (44), ஜெயமுருகன் (52), விக்ரம் (57), நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ஜெயசுதா (36), மனோஜ் குமார் (27) உள்பட 6 பேர் காயமடைந்தனர்.
காயம் அடைந்த ஜெயசுதா சேலம் சட்டக் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இதேபோல் ஆரோக்கிய ஜெனிபர் சேலம் அருகே உள்ள காடையாம்பட்டியில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார் என்பது தெரியவந்தது. இவர்கள் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து நேரிட்டதால் அரசு விரைவு சொகுசு பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர்கள் பதட்டம் மற்றும் பயத்துடனே காணப் பட்டனர். இதையடுத்து போக்குவரத்து அதிகாரிகள் அங்கு வந்து அவர்களை மாற்று பஸ்சில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.