பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன்.
இவர் அப்பகுதியில் தேங்காய் மட்டையிலிருந்து மஞ்சு தயாரிக்கும் நார்மில் வைத்து நடத்தி வருகிறார். இங்கு தேங்காய் மட்டையிலிருந்து மஞ்சு நார் தயாரிக்கப்பட்டு வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
நாரில் இருந்து பல்வேறு வகையான கயிர்கள் தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில் நார் மில் வேலை முடித்துவிட்டு பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்று விட்டனர்.
விடியற்காலை நார்மில்லில் உள்ள தேங்காய் மட்டை மஞ்சுவில் திடீரென தீப்பிடித்து புகை மண்டலமாக இருந்தது. அதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக நார் மில் உரிமையாளர் கார்த்திகேயனுக்கு தகவல் தெரிவித்தனர்.
கார்த்திகேயன் இது குறித்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட நார்மில் பகுதிக்கு விரைந்து சென்று நார்மில்லில் இருந்த தேங்காய் மஞ்சுகளில்எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து கட்டுப்படுத்தி தீ அருகில் உள்ள பகுதிகளுக்குப் பரவாமல் தடுத்தனர்.
இருப்பினும் நார் மில்லில் இருந்த சுமார்ரூ.1 லட்சம் மதிப்பிலான நார் தீயில் எரிந்து நாசமாயின.
கடந்த வாரம் இதே மில்லில் தீ விபத்து ஏற்பட்டது என்பது குறிப்பிடதக்கது. இது போன்ற ஏராளமான நார் மில்கள் இப்பகுதியில் செயல்பட்டு வருகிறது.
நார் மில்களை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட பிறகு அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.