பள்ளிப்பாளையம் அரசு பள்ளியில் வருகை புரிந்த மாணவர்களுக்கு கிருமி நாசினி வழங்கப்பட்ட காட்சி. 
உள்ளூர் செய்திகள்

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு-மாணவர்கள் உற்சாகம்

நாமக்கல் மாவட்டத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பால் மாணவ, மாணவிகள் உற்சாகம் அடைந்தனர்.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் 178 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், 120 மெட்ரிக் பள்ளிகள், 47 சி.பி.எஸ்.இ. பள்ளிகள், 22 சுயநிதி பள்ளிகள் என மொத்தம் 367 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன.

39 நாட்களுக்கு பின்னர் இந்த பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. நாமக்கல் தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வடக்கு அரசினர் மேல்நிலைப்பள்ளி, கோட்டை உயர்நிலை பள்ளி என அனைத்து பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு கிருமி நாசினி வழங்கப்பட்டு கைகளை சுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டது. 

தொடர்ந்து அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் உதவியுடன் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. இதன் பின்னரே பள்ளி வளாகத்திற்குள் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் உற்சாகமாய் வகுப்பறையில் அமர்ந்து இருந்ததை பார்க்க முடிந்தது. சிலர் நீண்ட நாட்களுக்கு பிறகு நண்பர்களை சந்தித்ததை கொண்டாடும் விதமாக அவர்களை கட்டி அணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.