விழாவில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மஞ்சப்பைகளை நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் வழங்கிய காட்சி. 
உள்ளூர் செய்திகள்

பொதுமக்களுக்கு மரக்கன்று, மஞ்சப்பைகள் கலெக்டர் ஸ்ரேயா சிங் வழங்கல்

மோகனூர் சுகாதார முகாமில் பொதுமக்களுக்கு மரக்கன்று, மஞ்சப்பைகள் கலெக்டர் ஸ்ரேயா சிங் வழங்கினார்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் மற்றும் வட்டார அளவிலான சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மாவட்ட  கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் முகாமினை தொடங்கி வைத்தார்.

 முகாமில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், பள்ளி இளம் சிறார் நலத்திட்டம், உணவு பாதுகாப்புத்துறை, குடும்ப நலத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலகு, தாய் சேய் நலம், நோய்த்தடுப்புத்துறை, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியவற்றின் மூலமாக மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. 

மேலும் மோகனூர் பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் பைகள் தடை குறித்தும், மீண்டும் மஞ்சள்பை திட்டம் குறித்தும், திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனைகளின் சிறப்பு மருத்துவ வல்லுநர்கள் கலந்துகொண்டு, மருத்துவ பரிசோதனை கருவிகளுடன் தனித்தனி பிரிவுகள் அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு நோய்கள் குறித்த பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டன. 

தமிழக அரசின் சித்த மருத்துவ துறையின் மூலம் மூலிகை கண்காட்சி அமைக்கப்பட்டு பல்வேறு நோய்கள் வராமல் தடுக்கவும், நோய்களை குணப்படுத்தவும் உட்கொள்ள வேண்டிய மூலிகைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

மேலும் கொரோனா எதிர்ப்பு மருந்தான ஆர்சனிக் ஆல்பம் மாத்திரைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. முகாமை பார்வையிட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் எடைகுறைவான குழந்தைகளுக்கு சத்துணவு பொருட்களையும், நமது நாமக்கல் பசுமை நாமக்கல் திட்டத்தின் மூலம் பழ மரக்கன்றுகளை மாணவர்களுக்கும், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த பொதுமக்களுக்கு மீண்டும் மஞ்சள் பைகளையும் வழங்கினார்.

முகாமில் ரத்ததானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன்,  ரத்ததானம் பெறப்பட்டது. முகாமில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஸ்கேன் பரிசோதனை, ரத்தப்பரிசோதனை, உடல் எடை குறித்து பரிசோதனைகளும், தடுப்பூசி போடும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டது. 

மேலும் வளரிளம் பெண்களுக்கு குழந்தை திருமணம் குறித்தும், 18 வயதிற்கு முன் திருமணம் செய்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், செல்போன் அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் மாணிக்கம்பாளையம் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவியர்கள் சிறு நாடகம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

இதில்  மோகனூர் பேரூராட்சித் தலைவர் வனிதா, துணைத்தலைவர் சரவணகுமார், துணை இயக்குநர் சுகாதாரம்  பிரபாகரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்  சீனிவாசன்,  குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பரிமளாதேவி, வட்டார மருத்துவ அலுவலர்  கலைச்செல்வி, பேரூராட்சி செயல் அலுவலர் கோமதி உள்பட அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.