சேந்தமங்கலம்:
சேந்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற சோமேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான தெப்பகுளம் சற்று தொலைவில் உள்ளது. மழைநீர் தேங்குவதற்காக கட்டப்பட்ட அந்த தெப்பக்குளத்தில் தற்போது கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இந்த நிலையில் நேற்று இந்து சமய அறநிலையத்துறையின் கோவை மண்டல ஆலோசனை தலைமை பொறியாளர் தமிழரசன் அங்கு வந்து தெப்பக்குளத்தை திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது தெப்பக்குளத்தில் தேங்கி நிற்கும் கழிவுநீரை வெளியேற்றும் வழி அமைப்பது, ஏற்கனவே அங்குள்ள ஓடையில் இருந்து குளத்திற்கு நீர்வழி வரும் பாதையில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து ஆலோசனை நடத்தினார்.
இதைத்தொடர்ந்து சோமேஸ்வரர் கோவிலுக்கு சென்ற அவர் அங்கு சாமி தரிசனம் செய்தார். மேலும் தெப்பக்குளத்தை தூர்வாரி அதில் சோமேஸ்வரர் தெப்பத்தேர் விடுவதற்கு ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதற்காக திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு இந்து சமய நிலையத்துறை கமிட்டிக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.