உள்ளூர் செய்திகள்

நாமக்கல்லில் அரசியல் கட்சிகளுக்கு புதிய கட்டுப்பாடு

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நாமக்கல்லில் அரசியல் கட்சிகளுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.

நாமக்கல்:

நாமக்கல் நகராட்சியில் மொத்தம் 39 வார்டுகள் உள்ளன. இதில் 2 வார்டுகளுக்கான கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 37 வார்டுகளுக்கு வருகிற 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

இதையொட்டி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிப் பிரமுகர்களுக்கான ஆலோசனைக் கூட்டம், நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வசிகாமணி முன்னிலை வகித்தார். நகராட்சி கமிஷனர் சுதா கூட்டத்திற்கு தலைமை வகித்து பேசியதாவது:

நகராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள், இரவு 8 மணி முதல், காலை 8 மணி வரை எவ்வித தேர்தல் பிரச்சாரமும் செய்யக் கூடாது. ஒலிபெருக்கி மற்றும் வாகனங்களை பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தக் கூடாது. நகராட்சிப் பகுதியில் கண்காணிப்பு பணிக்காக 3 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் விதிமுறை மீறல்கள் தெரியவந்தால் உடனடியாக பறக்கும் படையினருக்கு தகவல் தெரிவிக்கலாம். வேட்பாளர்கள் அனைவரும் கெரோனா தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றார்.