நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள வளையப்பட்டி ரோஜா நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 27). கூலித்தொழிலாளி. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இவருக்கும், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த ஷாலினி என்பவருக்கும் திருமணம் நடந்தது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஷாலினி உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். இதனால் மனைவி இறந்த துக்கத்தில் மணிகண்டன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் தீயை அனைத்து மீட்டதுடன், 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மணிகண்டன் இறந்தார். இதுகுறித்து அவரது தாய் காந்திமதி (60) மோகனூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தமிழழகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.