கொலை நடந்த குமாரபாளையம் பகுதியில் போலீசார் விசாரணை நடத்திய காட்சி. 
உள்ளூர் செய்திகள்

குமாரபாளையத்தில் மெக்கானிக் குத்திக்கொலை

குமாரபாளையம் டாஸ்மாக் பார் அருகே மெக்கானிக் குத்திக்கொலை செய்யப்பட்டார்.

குமாரபாளையம்,

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பெரியார் நகர் பால்காரர் வீதியில் வசித்து வந்தவர் கோபி (வயது 29). மெக்கானிக்.

நேற்று மாலை இவர் குமாரபாளையம் ஆனங்கூர் பிரிவு பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் மது குடிக்க சென்றார். 

அப்போது அவருக்கு அறிமுகமான குமாரபாளையம் ஒட்டன்-கோவில் பகுதியை சேர்ந்த மெக்கானிக் சசிகுமார் (31) என்பவர் அங்கு வந்தார்.

பின்னர் 2 பேரும் சேர்ந்து பாரில் வைத்து மது குடித்து விட்டு வெளியில் வந்தனர். அப்போது  ஆனங்கூர் பிரிவு அரசு மேல்நிலைப்-பள்ளி நுழைவுப்பகுதியில் வைத்து அவர்கள் ஏற்கனவே இருந்த முன்விரோதம் காரணமாக திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருவரும் தகாத வார்த்தைகளால் பேசினர். 

ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த கோபி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சசிகுமாரை சரமாரியாக குத்தினார். இதில் உடலில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது. உடனே கோபி அங்கிருந்து ஓடி விட்டார்.

ரத்தம் மளமளவென வடிந்த நிலையில் தள்-ளாடியபடி சசிகுமார் அங்குள்ள சாலையை கடந்து கீழே விழுந்து பரிதாப-மாக இறந்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சசிகுமாரை குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதனால் ஆஸ்பத்-திரியில் சசிகுமார் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். 

இது பற்றி தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, விசாரணை செய்து தலைமறைவாக இருந்த கொலையாளி கோபியை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அவரிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் ரவி, சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார், மலர்விழி, சிவகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.