பரமத்திவேலூர்:
திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த காமராஜ். இவருடைய மகன் பூர்வின் சங்கர், (வயது19). இவர் தொட்டியம் அருகே உள்ள தனியார் என்ஜினியரிங் கல்லூரியில் 3 -ம் ஆண்டு எலக்ட்ரானிக் கம்யூனிகேசன் எஞ்சினீயரிங் படித்து வருகிறார்.
இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை நாமக்கல் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்ப்பதற்காக, அதே கல்லூரியில் படிக்கும் அவரது நண்பர் கடலூர் மாவட்டம் வழுதலம்பட்டுவை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் மகன் சப்தகிரிவாசன் (19), கல்லூரியில் அனுமதி பெற்று தனது நண்பரின் மோட்டார்சைக்கிளை எடுத்துக் கொண்டு, பூர்வின் சங்கரை பின்புறம் உட்காரவைத்துக்கொண்டு புறப்பட்டார்.
மாணவர் சப்தகிரிவாசன் நாமக்கல் மாவட்டம் என்.புதுப்பட்டி அருகே உள்ள தாமரைச்செல்வி ஓட்டல் அருகே மோட்டார் சைக்கிளில் வந்தபோது, எதிரே பெங்களூரில் இருந்து திருச்சி நோக்கி வந்த பார்சல் வாகனம் திடீரென மோட்டார்சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் மாணவர்கள் சப்தகிரிவாசன், பூர்வின் சங்கர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். பொதுமக்கள், அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தலையில் பலத்த காயமடைந்த சப்தகிரிவாசன் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். கால் முறிந்த நிலையில் பூர்வின்சங்கர் நாமக்கல் அரசு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். பலியான மாணவன் சப்தகிரிவாசன் உடல் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.