கண்காட்சியில் பங்கேற்றவர்கள். 
உள்ளூர் செய்திகள்

வெண்ணந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி கண்காட்சி

வெண்ணந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி கண்காட்சி நடைபெற்றது.

மாலை மலர்

ராசிபுரம்:

வெண்ணந்தூர் ஒன்றியத்தின் சார்பில் வெண்ணந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இல்லம் தேடி கல்வியின் கல்வி கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர்கள் 86-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தங்களின் படைப்புகளை காட்சிப்படுத்தினர்.

இந்த கண்காட்சிக்கு வெண்ணந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) நடராஜன் முன்னிலை வகித்தார். வெண்ணந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி கண்காட்சியை தொடங்கி வைத்தார். 

வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) மாதவன் மற்றும் வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பிரபாகரன் ஆகியோர் பேசியதுடன், தன்னார்வலர்களுடன் கலந்துரையாடி மாணவர்களின் பங்கேற்பு குறித்து கேட்டறிந்தனர்.

கண்காட்சியை பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் கிருஷ்ணவேணி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பார்வையிட்டனர். 

இதற்கான ஏற்பாடுகளை வெண்ணந்தூர் வட்டார வள மைய மேற்பார்வையாளர், ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் வட்டார இல்லம் தேடி கல்வி ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.