உள்ளூர் செய்திகள்

மாடுகளை வெயில் நேரங்களில் மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம்-ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தல்

அதிக வெயில் நேரங்களில் மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம் என்று ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தி உள்ளது.

மாலை மலர்

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்களுக்கு நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் விவரம் வெளியிட்டு உள்ளது.

அதன்படி அடுத்த 3 நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மழை பெய்ய வாய்ப்பு இல்லை. காற்று மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் தென்கிழக்கு திசையில் இருந்து வீசும். வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 104 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 77 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 65 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 45 சதவீதமாகவும் இருக்கும்.

சிறப்பு வானிலையை பொறுத்த வரையில் கோடை காலத்தில் கறவை மற்றும் சினை மாடுகள் மற்றும் ஆடுகளில் வெப்ப அயற்சியினை தவிர்க்க காலை 6.30 மணி முதல் 10 மணி வரை மற்றும் மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை மட்டுமே மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டும். அதிக வெயில் உள்ள நேரங்களில் மேய்ச்சலுக்கு அனுப்பாமல், கொட்டகையிலோ அல்லது மர நிழலிலோ தங்க வைக்க வேண்டும்.

கோடை காலத்தில் பாலில் கொழுப்பு மற்றும் கொழுப்பற்ற திட பொருட்களின் அளவை நிலை நிறுத்த தீவனத்தில் சோடா உப்பு சேர்க்க வேண்டும். மேலும் ஒவ்வொரு கறவை மாட்டிற்கும் நாள் ஒன்றுக்கு 70 லிட்டருக்கு மேல் குடிநீர் கொடுக்க வேண்டும்.கோடை காலங்களில் நாட்டு கோழிகள் அதிக வெப்பம் மற்றும் அதிகபடியான அடர்த்தியில் இருக்கும் பட்சத்தில் ஒன்றை ஒன்று கொத்தி கொள்ள வாய்ப்பு உள்ளது. 

இந்த பிரச்சினையை குறைக்க தீவனத்தில் சமையல் உப்பினை சேர்க்க வேண்டும். மேலும் கோழிகளுக்கான இட வசதியை சற்று அதிகரிக்க வேண்டும். மேலும் வெயிலின் தாக்கத்தினை குறைக்க குடிநீரில் குளுக்கோஸ், எலுமிச்சை அல்லது பெருநெல்லிசாறு, மோர் சேர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.