நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் 5 நகராட்சிகளுக்குட்பட்ட 153 வார்டுகள் மற்றும் 19 பேரூராட்சிகளுக்குட்பட்ட 294 வார்டுகள் என மொத்தம் 447 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதனைத்தொடர்ந்து, வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள், எழுது பொருட்கள், படிவங்கள் மற்றும் உறைகள், அழியாத மை குப்பிகள் உள்ளிட்ட பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
மேலும், கொரோனா பாதுகாப்பு பொருட்களான தெர்மோ மீட்டர் கருவி, கிருமி நாசினி, முக கவசங்கள், கையுறை உள்பட பல்வேறு பொருட்களை துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்புடன் வாகனத்தில் அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனைத்தொடர்ந்து, சேந்தமங்கலம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜங்களாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் வாக்குபதிவிற்கான மின்னணு இயந்திரங்கள் மற்றும் இதர பொருட்கள் வரப்பெற்றுள்ளதையும், சிசிடிவி கேமிரா பொருத்தப்பட்டுள்ளதையும், மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலிகள், அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் ஸ்ரேயா பி. சிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் வாக்குப்பதிவின் போது தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களிடம் வாக்குப்பதிவிற்கு தேவையான பொருட்கள் அனைத்தும் வரப்பெற்றுள்ளதா, வாக்காளர்கள் பட்டியல், பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள காவலர்கள் உள்ளிட்ட விவரங்களை விரிவாக கேட்டறிந்தார். வாக்குபதிவு பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு அடிப்படை வசதிகள் உள்ளதா என்று பார்வையிட்டு உறுதி செய்தார்.
இந்நிகழ்வின் போது நாமக்கல் நகராட்சி ஆணையாளர் சுதா, எருமப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் சக்திவேல் சேந்தமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் தனுஷ்கோடி உட்பட பலர் உடனிருந்தனர்.