விபத்தில் சிக்கிய ஆட்டோ, இருக்கையில் பிணமாக கிடக்கும் டிரைவர். 
உள்ளூர் செய்திகள்

ராசிபுரம் விபத்தில் ஆட்டோ டிரைவர் பலி

ராசிபுரம் அருகே அரசு பஸ் மீது சரக்கு ஆட்டோ மோதி விபத்திற்கு உள்ளானதில், ஆட்டோ டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

மாலை மலர்

ராசிபுரம்:

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஜங்சன் பகுதியில் வசித்து வருபவர் அப்துல் ரகுமான் (வயது 46).  இவர் சேலத்தில் பல்வேறு இடங்களில் மீன் கடைகளை வைத்து நடத்தி வருகிறார். அதற்காக நாகப்பட்டினத்திற்கு மீன் வாங்க சரக்கு ஆட்டோவில் அப்துல் ரகுமான் சென்றார்.

நேற்று இரவு அங்கிருந்து சுமார் 800 கிலோ மீனுடன், சேலத்திற்கு சரக்கு ஆட்டோவில் புறப்பட்டார். ஆட்டோவை சேலம் கோரிமேட்டை சேர்ந்த பெருமாள் (56) ஓட்டிச் சென்றார்.  

இன்று (சனிக்கிழமை) அதிகாலை 4.30 மணியளவில் ராசிபுரம் அருகே உள்ள சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில்‌ சரக்கு ஆட்டோ சென்று கொண்டு இருந்தது. 

ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை அருகே சென்றபோது முன்னால் சென்ற அரசு பஸ் மீது ஆட்டோ மோதி விபத்திற்கு உள்ளானது. இதில் சரக்கு ஆட்டோவின் முன்புறம் அப்பளம் போல் நொறுங்கியது. 

மேலும் டிரைவர் பெருமாள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மீன் கடை உரிமையாளர் அப்துல் ரகுமான் காயம் அடைந்தார். 

மேலும் பெருமாளின் உடலானது, சரக்கு வாகனத்தில் இருந்து எடுக்க முடியாத அளவுக்கு சிக்கிக் கொண்டது. அரசு பஸ்சில் பயணம் செய்த 9 பயணிகளும் காயமின்றி உயிர் தப்பினர். தகவல் அறிந்த ரோந்து போலீசாரும், வெண்ணந்தூர் போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். 

காயமடைந்த அப்துல் ரகுமானை மீட்டு சேலம் தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.  பின்னர் பொக்லைன் எந்திரத்தின் உதவியோடு சரக்கு ஆட்டோவில் சிக்கிக்கொண்டு இருந்த டிரைவர் பெருமாளின் உடலும் மீட்கப்பட்டது. 

இதனால் அங்கு சிறிது போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து வெண்ணந்தூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.