உள்ளூர் செய்திகள்

அரசு ஆண்கள் பள்ளி கிணற்றுக்குள் இ-சேவை மைய ஊழியர் பிணமாக மீட்பு

பார்த்திபன் நாமக்கல்லில் உள்ள இ-சேவை மையத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 24-ந் தேதி மதியம் 2 மணி அளவில் பார்த்திபன் கரூரில் உள்ள தனது நண்பரை பார்த்து விட்டு வருவதாக சொல்லிவிட்டு சென்றார். ஆனால் இரவு வெகுநேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் மோகனூர் பெரியசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் என்கிற சத்யா(37). இவரது மனைவி மாதேஸ்வரி(35). இவர்களுக்கு 2 பெண் குழந்தை மற்றும் 1 ஆண் குழந்தை உள்ளது. பார்த்திபன் நாமக்கல்லில் உள்ள இ-சேவை மையத்தில் வேலை பார்த்து வந்தார்.

காணவில்லை

இந்நிலையில் கடந்த 24-ந் தேதி மதியம் 2 மணி அளவில் பார்த்திபன் கரூரில் உள்ள தனது நண்பரை பார்த்து விட்டு வருவதாக சொல்லிவிட்டு சென்றார். ஆனால் இரவு வெகுநேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை. அவரது மனைவி மாதேஸ்வரி பார்த்திபனுக்கு இரவு முழுவதும் போன் செய்தபோது போன் சுவிட்ச் ஆப்பில் இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாதேஸ்வரி பல்வேறு இடங்களில் கணவரை தேடிப்பார்த்தார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

கிணற்றில் பிணமாக மீட்பு

இந்நிலையில் நேற்று பார்த்திபன் மோகனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள கிணற்றுக்குள் பிணமாக கிடப்பதாக அவரது உறவினர் மாதேஸ்வரிடம் தெரிவித்தனர். அங்கு விரைந்து சென்ற மாதேஸ்வரி கணவன் உடலை பார்த்து கதறி அழுதார்.

மேலும் இது குறித்து மோகனூர் போலீசில் மாதேஸ்வரி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் பார்த்திபனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பார்த்திபன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அவர் எப்படி கிணற்றுக்குள் விழுந்தார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.