பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூர், கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரவள்ளிக்கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது.
இந்த பகுதிகளில் விளையும் மரவள்ளிக்கிழங்குகளை வியாபாரிகள் வாங்கி சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்குட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர். கிழங்கு ஆலையில் மரவள்ளிக்கிழங்கில் இருந்து ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது.
மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர். மரவள்ளி கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள் அதில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர்.
கடந்த வாரம் மரவள்ளிக்கிழங்கு டன் ஒன்று ரூ.7 ஆயிரம் வரை விற்பனையானது. தற்போது டன் ஒன்றுக்கு ரூ.1,250 வரை விலை வீழ்ச்சி அடைந்து தற்போது மரவள்ளிக்கிழங்கு டன் ஒன்று ரூ.5 ஆயிரத்து 750-க்கு விற்பனை ஆனது.
மரவள்ளிக்கிழங்கின் வரத்து அதிகரித்துள்ளதால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் மரவள்ளிக்கிழங்கு பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.