கோப்புப்படம் 
உள்ளூர் செய்திகள்

பரமத்திவேலூரில் ரூ.10.67 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

பரமத்திவேலூரில் தேங்காய் பருப்புகள் ஏலம் விடப்பட்டது. இதில் ரூ.10.67 லட்சத்துக்கு ஏலம் போனது.

மாலை மலர்

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை பெயரிட்டுள்ளனர். 

இப்பகுதிகளில் விளையும் தேங்காய்கள் மற்றும் தேங்காய் பருப்புகளை உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், அருகாமையில் பரமத்திவேலூர் மற்றும் சாலைப்புதூரில் செயல்பட்டு வரும் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். 

பரமத்தி வேலூர் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் ரூ.10 லட்சத்து 67ஆயிரத்து 725-க்கு தேங்காய் பருப்பு ஏலம் போனது. 

பரமத்திவேலூர் மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு பொங்கல் பண்டிகையின்போது காப்புக்கட்டு விழா காரணமாக விவசாயிகள் தேங்காய் பருப்பை ஏலத்திற்கு கொண்டு வராததால் ஏலம் நடைபெறவில்லை. 

நேற்று நடைபெற்ற தேங்காய் பருப்பு ஏலத்திற்கு 12 ஆயிரத்து 998 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டுவந்திருந்தனர். 

இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.96.03-க்கும், குறைந்த பட்சமாக ரூ.73-க்கும், சராசரியாக ரூ.85.19-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.10 லட்சத்து 67 ஆயிரத்து 725-க்கு வர்த்தகம் நடைபெற்றது.