தேனி மாவட்டத்தில் கடந்த 1 மாதத்துக்கு முன்பு வரை 1 கிலோ ஆட்டு இறைச்சி ரூ.800 முதல் ரூ.900 வரை விற்பனையானது. தற்போது தேனி மற்றும் புறநகர் பகுதிகளிலும் போடியில் ஒரு சில இடங்களிலும் இறைச்சி விலை பாதியாக குறைந்தது.
1 கிலோ ரூ.400 முதல் ரூ.450 வரை விற்பனை செய்யப்படுகிறது. தேர்தல் சமயம் என்பதால் தற்போது பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் வேட்பாளர்கள் தங்களுடன் வரும் ஆதரவாளர்களுக்கு அசைவ விருந்து வழங்கி வருகின்றனர்.
மேலும் தொழில் போட்டி காரணமாகவும் இறைச்சி விலையை வியாபாரிகள் படிப்படியாக குறைத்து வருகின்றனர். இதன் காரணமாக விலை குறைந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இறைச்சியுடன் தேங்காய், முட்டை ஆகியவை இலவசம் என்ற அறிவிப்பு பலகையும் கடைகள் முன்பு வைக்கப்பட்டுள்ளது. இதனால் எந்த கடையில் விலை குறைவு என்று பார்த்தபடியும், இலவச பொருட்கள் எவை என்பது குறித்து அறிந்தபின்பு இறைச்சியை பொதுமக்கள் வாங்கிச் செல்கின்றனர். இதனால் கடந்த சில நாட்களாக இறைச்சி கடைகளில் வியாபாரம் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
ஆனால் இந்த விலை குறைப்பு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கமாக விற்பனையாகும் விலையை விட பாதியாக குறைந்திருப்பதால் உண்மையிலேயே இவை ஆட்டுக்கறியா? என்று சோதனை நடத்த வேண்டும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு கோரிககை விடுத்துள்ளனர்.
மேலும் சமீப காலமாக தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் நோய் தாக்குதலுக்கு உள்ளான ஆடுகள் இறந்து வந்தன.