வத்தலக்குண்டு:
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. சமீபத்தில் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 10 வார்டுகளில் தி.மு.க.வும், 2 வார்டுகளில் காங்கிரஸ் கட்சியும், அ.தி.மு.க., பா.ஜ.க., சுயேட்சை ஆகியவை தலா ஒரு வார்டிலும் வெற்றி பெற்றது.
இதில் தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் பதவி ஒதுக்கப்பட்டது.
ஆனால் கடந்த 4ம் தேதி பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் பதவிக்காக நடந்த மறைமுக தேர்தலில் 3வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் கல்பனாதேவி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து நடந்த துணைத்தலைவர் தேர்தலில் வாக்களிக்க கவுன்சிலர்கள் வராததால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று முதல்&அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து பேரூராட்சி தலைவர் பதவியை கல்பனாதேவி ராஜினாமா செய்தார்.
இதன் காரணமாக பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் தலைவராக தி.மு.க. கூட்டணியில் உள்ள 1வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் சியாமளா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
இதேபோல் துணைத் தலைவராக 3வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் கல்பனாதேவி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இவர்கள் 2 பேரும் மறைமுக தேர்தலில் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அன்புமணி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் உமாசுந்தரி ஆகியோர் அறிவித்தனர்.
பின்னர் தி.மு.க. திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ., திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் அப்துல் கனிராஜா ஆகியோர் பேரூராட்சி அலுவலகத்திற்கு வருகை தந்து தலைவர் சியாமளா துணைத்தலைவர் கல்பனா தேவி ஆகியோரை தலைவர், துணைத் தலைவர் இருக்கையில் அமர்த்தி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதில் வத்தலக்குண்டு தி.மு.க. ஒன்றிய செயலாளர் முருகன், பட்டிவீரன்பட்டி தி.மு.க. நகர செயலாளர் அருண்குமார், காங்கிரஸ் வட்டார தலைவர் காமாட்சி மற்றும் கட்சி நிர்வாகிகள் வார்டு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.