தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அனுமந்தபுரம் முனியப்பன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பசுபதி. இவரது மனைவி செவ்வந்தி (வயது30). இவர்களுக்கு கவியரசு (10) என்ற மகனும், காவ்யா (7), நதியா (5) என்ற மகள்களும் உள்ளனர். இதில் கவியரசு அரசு பள்ளியில் 5-ம் வகுப்பும், காவ்யா 2-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி பசுபதி தோட்டத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்தார். அப்போது செவந்தி சமையல் செய்யாமல் இருந்துள்ளார். இதனால் அவர் தனது மனைவியை திட்டியுள்ளார். பின்னர் அவர் மீண்டும் வெளியே சென்றுவிட்டு இரவு வந்து பார்த்தபோது தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளையும் காணவில்லை.
இதனால் பதறிப்போன பசுபதி அவர்களை உறவினர்கள் வீடுகளில் தேடிபார்த்தார். எங்கும் தேடியும் அவர்கள் கிடைக்காததால் மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து பாலக்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 குழந்தைகளுடன் மாயமான செவ்வந்தியை தேடிவருகின்றனர்.