மலைக்கோட்டையில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த போலீசார். 
உள்ளூர் செய்திகள்

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டிதிண்டுக்கல்லில் 700-க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்பு

திண்டுக்கல்லில் பஸ்நிலையம், ரெயில்நிலையம், வழிபாட்டு தலங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிக அளவு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு நடத்தி சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் இருந்தால் அவர்களிடம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

திண்டுக்கல்:

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் பஸ்நிலையம், ரெயில்நிலையம், வழிபாட்டு தலங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிக அளவு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட எஸ்.பி.பாஸ்கரன் உத்தரவின் பேரில் அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு நடத்தி சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் இருந்தால் அவர்களிடம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் கடந்த 2 நாட்களாக போலீசார் பயணிகளின் உடமைகளை பரிசோதனை செய்து கண்காணித்து வருகின்றனர்.

திண்டுக்கல் நகரில் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் மலைக்கோட்டையிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு திருக்கார்த்திகையை முன்னிட்டு ஒரு தரப்பினர் தீபம் ஏற்ற வருவார்கள் என்ற தகவலால் இந்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் யாரையும் மலைக்கோட்டைக்கு அனுமதிக்கவில்லை.

இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். தொடர்ந்து இன்று முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டதால் அப்பகுதியில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தது.

இதேபோல் மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் சந்தேகப்படும்படியான நபர்கள் சுற்றித்திரிந்தால் அவர்களது விபரங்களை கேட்டறிந்து புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன் முகவரி மற்றும் செல்போன் எண்களையும் போலீசார் குறித்து வைத்துக்கொண்டனர்.