உள்ளூர் செய்திகள்

வீடுகளுக்குள் புகுந்து குரங்குகள் அட்டகாசம்.. ஆசனூர் மக்கள் அவதி

கையில் எடுத்துச் செல்லும் பொருட்களை வலுக்கட்டாயமாக பிடுங்குகிறது.தாளவாடி வனச்சரக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈரோடு மாவட்டம் ஆசனூர் அடுத்த அரேப்பாளையம் பகுதியில் குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதால் பொது மக்கள் தெருக்களில் நடந்து செல்ல அச்சமடைந்து வருகின்றனர்.

இங்குள்ள முக்கிய வீதிகளில் குரங்குகளின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

கூட்டமாக வரும் குரங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து உணவுப் பொருட்களை திண்றும், அழித்தும் நாசம் செய்கின்றன.

மேலும் பள்ளி செல்லும் சிறுவர்கள் மற்றும் கடைகளிலிருந்து பொருட்களை வாங்கி வரும் பெண்களை அச்சுறுத்தி, கையில் எடுத்துச் செல்லும் பொருட்களை வலுக்கட்டாயமாக பிடுங்கிச் செல்வதால் அச்சமடைந்துள்ளனர்.

எனவே அரேப்பாளையம் பகுதியில் அதிகரித்துள்ள வன விலங்கான குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து, வனப்பகுதியில் விட தாளவாடி வனச்சரக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.