மதுரை
மதுரை ஆரப்பாளையம் வைகை ஆற்றில் நேற்று ஆண் ஒருவர் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவஇடத்திற்கு சென்று அந்த உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் அவர் எரித்துக் கொல்லப்பட்டு இருப்பது தெரியவந்தது.
ஆனால் அவர் யார்? கொலை செய்தது யார்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் கொலை செய்யப்பட்டவர் ஆரப்பாளையம் தென்கரையை சேர்ந்த மணிமாறன் (வயது 43) என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரை அவருடைய தந்தை முருகேசன் (வயது 72), தாய் கிருஷ்ணவேணி (55) ஆகிய 2 பேரும் கொன்று எரித்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கரிமேடு போலீசார் கைது செய்தனர். மகனை கொன்று எரித்ததற்கான காரணம் குறித்து அவர்களிடமட் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதுகுறித்து கைதான முருகேசன் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:&
நான் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறேன். எனது மனைவி கிருஷ்ணவேணி. எனது மகன் மணிமாறன். அவனுக்கு திருமணமாகி 3 பிள்ளைகள் உள்ளனர். மணிமாறன் சரிவர வேலைக்கு செல்வது இல்லை. எனவே குடும்பத்தில் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனால் அவன் மனைவி கோபித்துக்கொண்டு, தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். எனவே மணிமாறன் கடந்த சில மாதங்களாக எங்களுடன் வசித்து வந்தார். நான் வயதான காலத்திலும் கூலித்தொழில் செய்து குடும்பத்தை நடத்தி வருகிறேன். ஆனால் மணிமாறன் ஒழுங்காக வேலைக்கு செல்வது இல்லை.
தினமும் மது குடித்துவிட்டு வந்து எங்களிடம் பணம் கேட்டு தகராறு செய்வான். அதேபோல் சம்பவத்தன்று இரவு தாய் கிருஷ்ணவேணியிடம் குடிக்க பணம் கேட்டு நச்சரித்து வந்தான். இதனை நான் கண்டித்தேன். இதனால் ஆத்திரம் அடைந்த அவன் கிருஷ்ணவேணியை அவதூறாக பேசி கீழே தள்ளிவிட்டான்.
எனவே நான் கோபத்தில் அங்கு கிடந்த விறகு கட்டையால் அடித்தேன். இதில் அவன் மயங்கி கீழே விழுந்தான். நான் அவனை பரிசோதித்துப் பார்த்தபோது பேச்சு மூச்சு இல்லை. அவன் இறந்து விட்டான். கோபத்தில் மகனை அநியாயமாக கொன்று விட்டோமே? என்ற நினைப்பு வந்தது.
இந்த விஷயம் ஊருக்கு தெரிந்தால், அவமானமாக போய்விடும். எனவே அவனை வைகை ஆற்றங்கரையில் எரித்து விடுவோம் என்று மனைவி கிருஷ்ணவேணி யோசனை கூறினார். இதையடுத்து நான் வீட்டிலிருந்த சாக்கில் மணிமாறனை திணித்து மூட்டையாக கட்டினேன். அதன் பிறகு நானும், எனது மனைவியும் சைக்கிளில் எடுத்துச்சென்று வைகை ஆற்றங்கரையில் தீ வைத்து கொளுத்திவிட்டு வீடு திரும்பினோம்.
இவ்வாறு முருகேசன் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
தொழிலாளி மணிமாறன் கொலையில் கொலையாளிகளை கைது செய்தது எப்படி? என்பது தொடர்பாக போலீசார் கூறியதாவது:&
கொலை குறித்து தகவல் கிடைத்தவுடன் நாங்கள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினோம். இதுதொடர்பாக செல்லூர் தாகூர்நகர் சண்முகவேல் என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் அவர் எங்களிடம், சம்பவம் நடந்த 27&ந் தேதி இரவு 11.40 மணிக்கு மோட்டார்சைக்கிளில் வேலைக்கு சென்று உள்ளார்.
அப்போது வயதான பெரியவரும், மூதாட்டியும் சிவப்பு கலர் போர்வை மூடிய சாக்கு மூட்டை ஒன்றை சைக்கிளில் வைத்து தள்ளிக்கொண்டு சென்றதை பார்த்தேன். அடுத்த நாள் காலையில் பணி முடிந்து வரும்போது வைகை ஆற்றங்கரையில் எரிந்த சடலம் பற்றிய தகவல் கிடைத்தது. எனவே நான் அங்கு சென்று பார்த்தேன். அப்போது அங்கு சிவப்பு போர்வை கிடந்தது. எனவே அந்த முதியவர்கள் தான், இந்த கொலையை செய்து இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து நாங்கள் சண்முகவேல் குறிப்பிட்ட தெருவில் உள்ள சி.சி.டி.வி கண்காணிப்பு காமிராவை கைப்பற்றி ஆய்வு செய்து பார்த்தபோது முருகேசன்&கிருஷ்ணவேணி ஆகியோர் மகன் மணிமாறனின் உடலை சைக்கிளில் கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை வைத்து மண்மாறனின் பெற்றோரை கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.