கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டதையும், சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றதையும் படத்தில் காணலாம்.  
உள்ளூர் செய்திகள்

குடிநீர் கேட்டு கிராம மக்கள் மறியல்

குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். உசிலம்பட்டி-திருமங்கலம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உசிலம்பட்டி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது ஆரியபட்டி ஏ.கண்ணியம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஏ.கண்ணியம்பட்டி கிராமத்திற்கு கடந்த 2 மாதங்களாக குடிநீர் வரவில்லை என்று கூறப்படுகிறது. தங்களது கிராமத்திற்கு குடிநீர் சீராக சப்ளை செய்ய வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்துள்ளனர்.

மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர். இருந்த போதிலும் குடிநீர் வரவில்லை என தெரிகிறது. தற்போது அந்த பகுதியில் கோவில் திருவிழாக்கள் நடந்து வருகின்றன. இந்த சூழலில் குடிநீர் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு உள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த ஏ.கண்ணியம்பட்டி கிராமமக்கள் இன்று உசிலம்பட்டி-திருமங்கலம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். 50-க்கும் மேற்பட்டோர் சாலையின் குறுக்கே அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள். பெண்கள் காலிக் குடங்களுடன் சாலையில் அமர்ந்தனர்.

இதனால் அந்த வழியாக வாகனங்கள் எதுவும் செல்ல முடியவில்லை. வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்ததை தொடர்ந்து, மறியல் போராட்டத்தை கிராம மக்கள் கைவிட்டனர். கிராம மக்களின் இந்த திடீர் போராட்டத்தால் உசிலம் பட்டி-திருமங்கலம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.