ரெயில் 
உள்ளூர் செய்திகள்

ரெயிலில் புகைப்பட அடையாள அட்டையுடன் பயணிக்க ரெயில்வே நிர்வாகம் அறிவுறுத்தல்

ரெயிலில் உரிய பயணச்சீட்டு மற்றும் புகைப்பட அடையாள அட்டையுடன் பயணம் செய்ய வேண்டும் என்று மதுரை கோட்ட ரெயில்வே நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மாலை மலர்

மதுரை

மதுரை கோட்ட ரெயில்களில் டிக்கெட் பரிசோதகர்கள் அதிரடி சோதனை நடத்தி பயணச்சீட்டு இன்றி பயணம் செய்வோர், பதிவு செய்யப்படாத உடமைகளை கொண்டு செல்வோர், வேறு ஒருவர் பெயரில் உள்ள பயணச்சீட்டில் பயணம் செய்வோர் ஆகியோருக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு(2021) ஏப்ரல் மாதம் முதல் நடப்பாண்டு பிப்ரவரி 27-ந்தேதி வரை 1.37 லட்சம் பயணிகள் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.7.79கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது. தெற்கு ரெயில்வே அளவில் பயணச்சீட்டு இல்லாத வர்களிடம் ரூ.83.99கோடி அபராதம் விதிக்கப்பட்டது. 

இது கடந்த ஆண்டை காட்டிலும் 22.9சதவீதம் அதிகம். இந்த பிப்ரவரி மாதம் மட்டும் பயணச்சீட்டு இல்லாத  பயணிகளிடம்,  தெற்கு ரெயில்வே அளவில்  ரூ.9.15கோடி அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 32.8சதவீதம் அதிகம்.

அதிலும் குறிப்பாக பிப்ரவரி 27ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) மட்டும் ஒரே நாளில் அதிகபட்சமாக பயணச்சீட்டு இல்லாத 8425 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.43.35லட்சம்  அபராதம் வசூலிக்கப்பட்டது.

எனவே பயணிகள் ரெயிலில் உரிய பயணச்சீட்டு மற்றும் புகைப்பட அடையாள அட்டையுடன் பயணம் செய்வதோடு அனுமதிக்கப்பட்ட அளவில் உடைமைகளை எடுத்துச் செல்ல வேண்டும் என்று மதுரை கோட்ட ரெயில்வே நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.