மதுரை
மதுரை மாட்டுத்தாவணியில் 27 ஏக்கரில், 85 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 648 கடைகள் உடன் குளிரூட்டும் அதிநவீன நிரந்தர காய்கறி அங்காடி வளாகம் அமைக்கப்படும் என்று அப்போதைய மத்திய மந்திரி மு.க.அழகிரி கடந்த 2010-ம் ஆண்டு அறிவித்தார்.
இதனை தொடர்ந்து அன்றைய முதல்வர் கருணாநிதி, மதுரையில் நிரந்தர காய்கறி அங்காடி வளாக திட்டத்துக்கு மாநில அரசின் சார்பில் 30கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில் 11 ஆண்டுகளை கடந்தும் திட்டம் குறித்து எந்தவித நடவடிக்கைகளும் இல்லை. எனவே மதுரையில் நிரந்தர காய்கறி அங்காடி வளாகம் எப்போது செயல்படுத்தப்படும்? என்பது குறித்து விவசாய குறை தீர் கூட்டத்தில் விவசாயி கிருஷ்ணபாண்டி கோரிக்கை மனு அனுப்பி இருந்தார்.
இதற்கு மதுரை வேளாண்மை விற்பனைக் குழு பதில் அளித்த அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் படி மாட்டுத்தாவணி நிரந்தர காய்கறி மார்க்கெட் திட்டம் கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2ந்தேதி நடந்த 16-வது மாநில அளவிலான நிலைக் குழுவில் கைவிடப்பட்டது. அந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்ய அரசு அனுமதி தரும்பட்சத்தில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள் ளது.
இது தென் மாவட்ட விவசாயிகளின் நீண்டநாள் கனவு திட்டம் ஆகும். அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய காய்கறி மார்க்கெட் மூலம் ஒரே இடத்தில் காய்கறி,- பழங்களை சேகரிக்க முடியும். அவற்றை இடைத்தரகர்கள் இல்லாமல் விற்பனை செய்யலாம். இதனால் நுகர்வோருக்கு தரமான காய்கறி- பழங்கள் கிடைப்பதுடன், விவசாயி களுக்கும் நல்ல விலை கிடைக்கும். இது தவிர மதுரையில் வேலைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதி வாய்ப்பு களும் கிடைக்கும்.
தென் மாவட்ட விவசாயிகளின் மிகப்பெரும் எதிர்பார்ப்பாக இருந்த மாட்டுத்தாவணி நிரந்தர காய்கறி அங்காடி திட்டம் கைவிடப்பட்டதாக அரசு தெரிவித்துள்ள பதில், விவசாயிகள்,- வியாபாரிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு காய்கறி அங்காடிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் 3 திட்டங்களை செயல்படுத்த மாநகராட்சி முயற்சித்தது. அப்போது அந்த இடத்தில் நிரந்தர காய்கறி அங்காடி மட்டுமே செயல்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கடந்த 2019ம் ஆண்டு இடைக்கால தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே தமிழக அரசியல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த இடத்தில் கலைஞர் நூலகம் அமைப்பதற்காக பார்வையிட்டபோது வியாபாரிகள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து நத்தம் சாலைக்கு நூலகம் இடமாற்றம் செய்யப்பட்டது.
எனவே முந்தைய தி.மு.க. அரசு அரசாணை வெளியிட்ட திட்டத்தை மீண்டும் பரிசீலனை செய்து உடனடியாக தொடங்க வேண்டும் என்று வியாபாரிகளும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்தனர்.