உள்ளூர் செய்திகள்

ஓடும் பஸ்சில் வாலிபர் சாவு

மதுரை மாட்டுத்தாவணியில் ஓடும் பஸ்சில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். தனியார் பஸ்சில் வந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

மதுரை

மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து தனியார் பஸ் பயணிகளை ஏற்றிக் கொண்டு மாட்டுத்தாவணி பஸ் நிலையத்திற்கு வந்தது. பயணிகள் அனைவரும் இறங்கிய நிலையில் பஸ்சின் இருக்கையில் வாலிபர் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மாட்டுத்தாவணி போலீசார் வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பஸ்சில் பிணமாக கிடந்தவர் மேலூர் அருகே உள்ள எஸ்.கல்லம்பட்டியைச் சேர்ந்த சேக் தாவூத் (வயது 35) என்பது தெரியவந்தது. இவருக்கு ஏற்கனவே இதய நோய்க்காக ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டிருந்தது.

நாகர்கோவிலில் வேலை பார்த்து வந்த சேக் தாவூத் சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்துள்ளார். மதுரையில் வேலை தேடுவதற்காக சம்பவத்தன்று தனியார் பஸ்சில் வந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது. இதில் அவர் இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதன் அடிப்ப டையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.