இம்மையிலும் நன்மை தருவார் கோவில் வளாகத்தில் அமர்ந்திருந்த பக்தர்கள். 
உள்ளூர் செய்திகள்

சிவாலயங்களில் பக்தர்கள் விடிய விடிய வழிபாடு

மதுரை கோவில்களில் நடந்த மகா சிவராத்திரி விழாவில் பக்தர்கள் விடிய விடிய வழிபாடு நடத்தினர்.

மதுரை

மதுரையில் உள்ள சிவன் கோவில்களில் நேற்றுஇரவு மகா சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்று இரவு முதல் கோவில் திறக்கப்பட்டு அபிஷேக ஆராதனைகள் இன்று காலை வரை நடந்தன.  

விழாவில் சுந்தரேசுவரர் சுவாமிக்கு 1008 சங்காபிஷேக மும், மீனாட்சிக்கு 108 சங்காபிஷேகமும் நடந்தது.  பக்தர்கள் அர்ச்சனை பொருட்களுடன் இரவு முழுவதும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு சுவாமி&அம்மனை வழிபாடு செய்தனர். 

மகாசிவராத்திரியையொட்டி மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்று இரவு 4 கால பூஜைகள் நடந்தன. இரவு 10 மணிக்கு முதல் கால பூஜை&அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து  விடிய விடிய 4 கால பூஜைகள் நடந்தன. இரவு முழுவதும் தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். 

கொரோனா கட்டுப்பாடுகளுக்கு பிறகு நேற்று இரவுமுழுவதும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால் மகிழ்ச்சியடைந்தனர்.  மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றிலும் நேற்று இரவு விடிய விடிய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 

மகாசிவராத்திரி விழாவையொட்டி மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்றுஇரவு முழுவதும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. சொல்லரங்கம், சலங்கை நடனம், பக்தி இன்னிசை, வீணை கச்சேரி, பரதநாட்டியம், தேவாரம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் விடிய விடிய நடந்தன.  இந்த நிகழ்ச்சிகளை திரளான பக்தர்கள் கண்டு ரசித்தனர். 

அதே போன்று தெப்பக்குளம்  முக்தீஸ்வரர் கோவில், செல்லூர் திருவாப்புடையார் கோவில், இம்மையிலும் நன்மை தருவார் கோவில்,  ஆதிசொக்கநாதர் கோவில் உள்ளிட்ட அனைத்து சிவாலயங்களிலும் பக்தர்கள் இரவு முழுவதும் விழித்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை விடிய விடிய பூஜைகள் நடந்தன. திரளான பக்தர்கள் கோவில் பிரகாரத்தை பலமுறை வலம் வந்தபடி இருந்தனர். அவர்கள் 4 கால பூஜைகளிலும் பங்கேற்று சாமி கும்பிட்டனர். 

மகா சிவராத்திரி விழாவையொட்டி திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் மூலஸ்தானத்தில் அமைந்துள்ள சத்தியகிரீஸ்வரருக்கு நேற்றுஇரவு 9.30மணிக்கு முதல் கால பூஜை தொடங்கியது. இரவு முழுவதும் தொடர்ந்து 4 கால பூஜைகள் நடந்தன.  ஒவ்வொரு பூஜையின் போதும் சுவாமிக்கு பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அலங்காரங்கள், ஆராதனைகள் நடைபெற்றன. 

திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள பால்சுனை கண்ட சிவபெரு மானுக்கு சிவராத்திரி விழாவையொட்டி அபிஷேகங்கள் நடந்தன.  ருத்ராட்சை, பூக்கள் உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டது. 

இந்து அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட திருநகர் சித்தி விநாயகர் கோவிலில் அமைந்துள்ள காசி விஸ்வநாதருக்கு நேற்றுஇரவு முழுவதும் 4 கால பூஜைகள் நடந்தன. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம், வேதிகார்ச்சனை, ஸ்திர ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. 

அதே போன்று பாண்டியன் நகர் கல்யாண விநாயகர் கோவிலில் தனி சன்னதியில் எழுந் தருளியுள்ள காசி விஸ்வநாதருக் கும் 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு தீப தூப ஆராதனைகள் நடந்தன. மேலூர் அருகே உள்ள திருவாதவூர் திருமறைநாதர்& வேதநாயகி அம்மன் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடந்தது. இரவு 9.30 மணியளவில் முதல் கால பூஜையும், இரவு 11.30 மணிக்கு 2&ம் கால பூஜையும், நள்ளிரவு 9.30 மணிக்கு 3&ம் கால பூஜையும், அதிகாலை 3.30 மணிக்கு 4&ம் கால பூஜையும் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கோவிலில் தங்கியிருந்து வழிபாடு செய்தனர்.  

மேலூர் நகரில் உள்ள காமாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலிலும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதேபோல் பல கோவில்களில் மகாசிவராத்திரி விழா விடிய விடிய நடந்தது.