பெரியார் பஸ் நிலையம் ரோட்டில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்ட பெண்கள். 
உள்ளூர் செய்திகள்

மதுரையில் 2 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல்

கழிவுநீர் பிரச்சினை மற்றும் குடிநீர் கேட்டு மதுரையில் 2 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல் நடந்தது.

மாலை மலர்

மதுரை

தமிழகத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பு வெயில் கொடுமை வாட்டி வதைத்து வருகிறது. பல இடங்களில் குடிநீர் பற்றாக்குறை காரணமாக பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

மதுரை மாநகரின் பல்வேறு இடங்களில் சரியாக குடிநீர் வினியோகம் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும் கழிவுநீர் கலந்து குடிநீர் வருவதால் அதனை பயன்படுத்த முடிவதில்லை என புகார் கூறி வருகின்றனர். 

இந்த நிலையில் மதுரை மாநகராட்சி 45வது வார்டுக்கு உட்பட்ட காம ராஜர்புரம் பகுதியில் பல மாதங்களாக சாக்கடை கலந்த கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதனால் அந்தப் பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது.  டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்களும் பரவுகிறது. 

இது தொடர்பாக அந்தப்பகுதி மக்கள் பலமுறை மனுகொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதை கண்டித்தும், பாதாள சாக்கடை கழிவுநீர் வெறியேறுவதை தடுக்க வலியுறுத்தியும், அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் இன்று மதுரை முனிச்சாலை சிக்னல் சந்திப்பில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.  இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து போராட்டக்காரர்களுடன்  பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் சாலை மறியல் கைவிடப்பட்டது. 

மதுரை பெரியார் பஸ் நிலையம் திடீர்நகர் பகுதியில் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு கடந்த சில வாரங்களாக சரியாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இதனால் அந்தப்பகுதி மக்கள் ஒரு குடம் குடிநீருக்காக அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

குடிநீர் பிரச்சினை குறித்து அதிகாரியிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதை கண்டித்து இன்று திடீர்நகர் பகுதியைச்சேர்ந்த பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் பெரியார் பஸ் நிலையம் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியபின் மறியல் கைவிடப்பட்டது.