உள்ளூர் செய்திகள்

சேமிப்பு திட்டத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் புகார் செய்யலாம்

சேமிப்பு திட்டத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் புகார் செய்யலாம் என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அதன்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

மதுரை

மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கமர்நிஷா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருச்சி, விக்னேஷ் அபார்ட்மெண்ட் என்ற முகவரியில் தற்போது குடியிருந்து வந்த முருகேசன், அவரது மனைவி மீனா ஆகியோர் மதுரை, பெரியார் பஸ் நிலையம் அருகில், நேதாஜி ரோட்டில் ''ஐஸ்வர்யா தங்க மாளிகை'' என்ற பெயரில் பல்வேறு நகை சிறுசேமிப்பு திட்டங்கள் மற்றும் நிறுவனத்தில் முதலீடு செய்தால் முதலீடு செய்யும் பணத்திற்கு 20 மாத காலத்திற்குள் இருமடங்காக பணம் தருவதாக ஆசை காட்டினர்.

மேலும் 2 மாதத்திற்கு ஒருமுறை அந்த பணத்திற்கான உறுதிச்சீட்டு (வவுச்சர்) பெற்றுக்கொண்டு பணமாகவோ, நகையாகவோ எடுத்துக்கொள்ளலாம் என்றும் நம்பகமான ஆசை வார்த்தைகளை கூறி நம்ப வைத்து பணத்தை முதலீடு செய்ய வைத்து, முதிர்வு காலம் முடிந்த நிலையில் பணத்தை திருப்பிதராமல் மோசடி செய்து விட்டனர்.

இதுகுறித்து நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தருமாறு பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் ஆஜராகி புகார் மனு கொடுத்தனர்.

அதன்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. எனவே ஐஸ்வர்யா தங்க நகை மாளிகை என்ற பெயரில் பணத்தை முதலீடு செய்து ஏமாந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்க ளுடன் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு, எண். 4/425A, சங்கரபாண்டியன் நகர், தபால்தந்தி நகர் விரிவாக்கம், பார்க்டவுன் பஸ் நிறுத்தம் எதிர்புறம், மதுரை -14 என்ற முகவரியில் நேரில் ஆஜராகி புகார் மனு அளிக்க வேண்டும். அதன்பேரில் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT