திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் - டி.கொக்குளம் சாலையில் கள்ளிக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட தூம்பக்குளம் கிராமத்தில் பழமையான பாலம் உள்ளது. 60 ஆண்டுகளை கடந்த இந்த பாலம் வழியாகத் தான் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்ல வேண்டும்.
இந்த பகுதிகளில் செயல்பட்டு வரும் மணல் குவாரி மற்றும் கல் குவாரிகளில் இருந்து அதிக அளவில் கனரக வாகனங்கள் செல்கின்றன. இதனால் இதனால் பாலம் பலம் இழந்தது. இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தொடர் மழை காரணமாக பாலம் மேலும் சேதமடைந்தது.
இதன் காரணமாக வாகனங்கள் செல்லும்போது பாலத்தில் அதிர்வு ஏற்பட்டதால் இப்பகுதி மக்கள் கனரக வாகனங்கள் செல்லக்கூடாது என கோரிக்கை விடுத்து சம்பந் தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனை அடுத்து பாலத்தை ஆய்வு செய்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கனரக வாகனங்கள் செல்ல தடை விதித்துள்ளதாகவும் இனிமேல் கனரக வாகனங்கள் இப்பகுதிகளில் செல்லாது எனவும் தெரிவித்தனர்.ஆனால் அதிகாரிகள் உத்தரவையும் மீறி தொடர்ந்து அப்பகுதியில் கனரக வாகனங்கள் மற்றும் அரசு பேருந்துகள் சென்று வந்தன.
இதனால் பாலத்தின் அடிப்பகுதி பலத்த சேதம் அடைந்தது. இந்தநிலையில் டி.கிருஷ்ணாபுரம் பகுதி குவாரியில் இருந்து கிராவல் மண் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று பாலத்தின் வழியாக வந்தது. லாரியை திருமங்கலத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் ஓட்டி வந்தார்.
இந்தநிலையில் மணல் ஏற்றி வந்த லாரி பாலத்தை கடக்க முயன்றபோது பாரம் தாங்காமல் பாலத்தின் மையப்பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதில் லாரியின் பின் பகுதி பாலத்தில் கவிழ்ந்து விழுந்ததில் லாரியின் முன்பக்கம் மேல் நோக்கி சென்றது. இந்த சம்பவத்தில் லாரி ஓட்டுநர் முருகன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். லாரி விழுந்ததை கண்டு கிராமமக்கள் ஓடி வந்து லாரி ஓட்டுநரை பத்திரமாக மீட்டனர்.
கனரக வாகனம் சென்றதில் பாலம் இடிந்து விழுந்ததால் திருமங்கலம்-கொக்குளம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த கூடக்கோவில் போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
பாலம் இடிந்து விழுந்ததால் அந்த பகுதி கிராமமக்கள் 6 கிலோமீட்டர் சுற்றி மாற்றுப்பாதையில் செல்லும் நிலை உருவாகியுள்ளது.