மீனாட்சி அம்மன் கோவில் வசந்த உற்சவம். 
உள்ளூர் செய்திகள்

மீனாட்சி அம்மன் கோவில் வைகாசி வசந்த உற்சவம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நாளை முதல் வைகாசி வசந்த உற்சவம் நடைபெறுகிறது.

மாலை மலர்

மதுரை

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைகாசி வசந்த உற்சவம் நாளை (3-ந்தேதி) முதல் 12-ந்தேதி வரை நடக்கிறது. அதன்படி 1-ம் திருநாள் முதல் 9-ம் திருநாள் வரை பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமிகள் புறப்பாடு மாலை 6 மணி அளவில் நடக்கும். அப்போது சுவாமிகள் கோவிலில் இருந்து புது மண்டபம் சென்று, அங்கு வீதி உலா- தீபாராதனை நடத்தப்படும். இதனைத் தொடர்ந்து சுவாமிகள், 4 சித்திரை வீதிகளிலும் வலம் வரும் உற்சவம் நடக்கும்.

12-ந்தேதி அன்று சுவாமிகள் காலையில் புது மண்டபத்தில் எழுந்தருளுவர். அங்கு பகல் முழுவதும் தங்கி சுவாமிகள் அருள்பாலிப்பர். அன்றைய தினம் மாலையில் அபிஷேகம், தீபாராதனை முடிந்து சித்திரை வீதி உலா நடக்கும்.

முன்னதாக 16-ந்தேதி முதல் 18-ந் தேதி வரை  திருஞானசம்பந்தர் திருவிழா நடக்கும். 18-ந்தேதி காலையில் ஞானசம்பந்தர் தங்கப்பல்லக்கில் எழுந்த ருளி, 63 நாயன்மார்களு டன் 4 ஆவணி மூல வீதி புறப்பாடு நடக்கும். அன்று இரவு 8 மணி அளவில் திருஞான சம்பந்தர் சுவாமிகள் வெள்ளி கோ ரதத்தில் எழுந்தருளி, நான்கு ஆவணி மூல வீதிகளிலும் திருவீதி உலா நடக்கும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 3-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை வைகாசி வசந்த உற்சவம் திருவிழா நடப்பதால், அன்றைய நாட்களில் திருக்கோவில் சார்பாக உபய தங்க ரதம், திருக்கல்யாணம் ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தப்படாது.

மேற்கண்ட தகவலை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் அறிக்கை வாயிலாக தெரிவித்து உள்ளது.