அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஒன்றானது மாசி மாதம் நடைபெறும் தெப்ப உற்சவம். இந்த விழா வானது நேற்று கஜேந்திர மோட்சத்துடன் தொடங்கியது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் இன்று நடைபெற்றது. காலை 6.45 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் ஸ்ரீதேவி பூமிதேவி சமேத கள்ளழகர் என்ற சுந்தராஜ பெருமாள் பல்லக்கில் எழுந்தருளி மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் தெப்பத்திற்கு புறப்பாடாகி சென்றார்.
தொடர்ந்து மண்டூக தீர்த்தம் என்ற பொய்கை கரைப்பட்டி புஸ்கரணிக்கு செல்லும் வழிநெடுகிலும் சுவாமி அம்பாள் சேவை சாதித்து தெப்பம் வந்தடைந்தனர். கடந்த சில ஆண்டுகளாக தெப்பக்குளத்தில் நீர் இல்லாததால் கள்ளழகர் கரையை சுற்றி எழுந் தருளினார்.
ஆனால் இந்த ஆண்டு பெய்த பருவமழை காரணமாக தெப்பக்குளம் முழு கொள்ளளவை எட்டி நீர் நிறைந்து காட்சியளிக்கிறது. தெப்ப உற்சவத்தை முன்னிட்டு அன்னப்பறவை வடிவத்தில் தெப்பம் அமைக்கப்பட்டிருந்தது.
இன்று பகல் ஸ்ரீதேவி பூதேவியுடன் பெருமாள் தெப்பத்தில் எழுந்தருளினார். இதை காண சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். தொடர்ந்து இன்று இரவு சுவாமி வந்த வழியாக சென்று கள்ளழகர் கோவிலுக்கு போய் இருப்பிடம் சேரும்.
இத்துடன் இந்த திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் அனிதா மற்றும் கண்காணிப்பாளர்கள் திருக்கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.