பெருக்கெடுத்து ஓடும் சாக்கடை. 
உள்ளூர் செய்திகள்

தெருவில் பெருக்கெடுத்து ஓடும் பாதாள சாக்கடை

மதுரை கட்ராபாளையத்தில் பாதாள சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது.

மாலை மலர்

மதுரை

மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ளது கட்ரா பாளையம். இந்த பகுதியில் ஏராளமான கடைகள் மற்றும் குடியிருப்புகள் உள்ளன. 

இங்குள்ள கடைக்கு வருபவர்கள், வீடுகளில் குடியிருந்து வருபவர்கள்,   மேலமாசிவீதிக்கு செல்பவர்கள் இந்த வழியாகத்தான் செல்வார்கள். 

மேலும் மதுரையில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான இம்மையிலும் நன்மை தருவார் கோவிலுக்கு இந்த வழியாகத்தான் பக்தர்கள் சென்று வருவார்கள்.  இதனால் காலை முதல் இரவு வரை இந்த கட்ரா பாளையம் பகுதி அதிக மக்கள் நடமாட்டத்துடன் காணப்படும். இந்த பகுதிகளில் அதிக அளவில் செருப்பு கடைகள் உள்ளன. இதனால் வியாபாரிகளும், வாடிக்கையாளர்களும் செருப்பு வாங்க இங்கு வருவதுண்டு. இதனால் எப்போது பார்த்தாலும் அட்டை கழிவுகளும், குப்பைகளும் குவிந்து கிடக்கும்.

கட்ராபாளையம் பகுதியில் பாதாள சாக்கடை வசதி உள்ளது. ஆனால் அதில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு விடுகிறது.  இதனால் சாலையில் பாதாள சாக்கடை கழிவுகள் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் நிகழ்வு அடிக்கடி அரங்கேறி வருகிறது. 

இந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் கட்ரா பாளையம் பகுதியில் பாதாள சாக்கடை கழிவுகள் வெளியேறின. அடைப்புகளை சரி செய்வதற்காக ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள “மேன்ஹோல்” வழியாக கழிவுகள் வெளியேறியது. 

இன்று காலையிலும் பாதாள  சாக்கடைகள் வெளியேறியபடி இருந்ததால் அந்த சாலை முழுவதும் பாதாள சாக்கடை கழிவுகள் பெருக்கெடுத்து ஓடியது. 

இதனால் அந்த பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசுகிறது. இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் கடை வியாபாரிகள்  சாலையில் தேங்கியிருந்த பாதாளச் சாக்கடை தண்ணீரில் நடந்து செல்ல நேரிட்டது. அவர்கள் வேறு வழியின்றி கடும் துர்நாற்றத்தையும் பொருட்படுத்தாமல் இந்த வழியாக நடந்து சென்றனர். கோவிலுக்கு சென்ற பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சாலையில் பாதாள சாக்கடை கழிவு தங்கியிருந்தால் மிகவும் அவதிக்கு உள்ளாகினர். 

கட்ராபாளையம் பகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்படுவது வாடிக்கையாக நடந்து வருகிறது. இதனால் இந்த பகுதி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பாதிப்பிற்கு உள்ளாவதும் தொடர்கதையாகி வருகிறது.‌ 

இதனால் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கட்ராபாளையம் பகுதி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.