மதுரை
கடந்த 2 ஆண்டுகளாக நாடு முழுவதும் கொரோனாவின் கோரதாண்டவம் தொடர்ந்து மனித உயிர் களை வேட்டையாடி வருகிறது. இந்த கொடிய நோய் தொற்றிலிருந்து மனித குலத்தை காக்கும் வகையில் தடுப்பூசிகள் போடப்ப்பட்டாலும் உருமாறிய வைரஸ் தொற்று மக்களிடையே மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.
இதனால் கொரோனா பரவலை முடிவுக்கு கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கி யுள்ளன. தமிழகத்திலும் கொரோனா அதிகரித்து வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத் தப்பட்டுள்ளது. தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி மதுரையில் இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. வணிக நிறுவனங்கள், மார்க்கெட்டுகள், கடைகள் அனைத்தும் மூடப் பட்டன. அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. ஆட்டோ, கார் உள்ளிட்ட தனியார் வாகனங்களும் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடி காணப் பட்டன. பொதுமக்கள் வீடு களிலேயே முடங்கி னர். வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டதால் கோவில் களிலும் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப் பட்டன.
அத்தியாவசிய தேவைகளான மருந்துக்கடைகள் பால் வினியோகம் உள்ளிட்ட பணிகள் மட்டும் நடைபெற்றன. மேலும் அத்தியாவசிய பணிகளுக்கு செல்லும் ஊழியர்கள் அவர்களுக்கு உரிய அடையாள அட்டையை காட்டி சாலைகளில் பயணம் செய்தனர். மருத்துவமனைகள், திரு மணம், துக்க நிகழ்ச்சிகள், அரசு போட்டித் தேர்வுகளுக்கு செல்லும் அனைவரும் தடையின்றி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
முழு ஊரடங்கு காரணமாக வாகன போக்குவரத்தை கட்டுப்படுத்தும் வகையில் பெரியார் பஸ் நிலையம், கோரிப்பாளையம், மாட்டுத்தாவணி, காளவாசல், பழங்காநத்தம், தெப்பக்குளம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்க ளில் போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தி தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவசர பணிகளுக்கு செல்பவர்களை தவிர மற்ற நபர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
தேவை இன்றி சுற்றிய நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டது. இன்று முழு ஊரடங்கு என்பதால் நேற்று இரவு 10 மணி வரை காய்கறி மார்க்கெட்டுகள் மற்றும் மீன், இறைச்சி கடைகள் திறந்திருந்தன. மக்கள் திரண்டதால் மீன் மற்றும் இறைச்சி கடைகளில் அதிக கூட்டம் காணப்பட்டது.
நேற்று இரவு 10 மணி முதல் நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணி வரை 31 மணி நேர ஊரடங்கு அமலில் இருப்பதால் மதுரையில் அனைத்து பகுதிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். தேவையின்றி சாலைகளில் கூட்டமாக நின்று பேசுபவர்களையும் எச்சரித்து கலைந்து போகச் செய்தனர். மேலும் முக கவசம் இன்றி சாலைகளில் பயணம் செய்த பொதுமக்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
மத்திய தேர்வாணயத்தின் போட்டித் தேர்வுகள் மதுரையில் பல்வேறு மையங்களில் இன்று நடைபெற்ற நிலையில் அதற்கென சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அதற்குரிய அனுமதி சீட்டு உள்ளவர்கள் மட்டும் பஸ்களில் அனுமதிக்கப்பட்டனர்.