உள்ளூர் செய்திகள்

பயணிகளை ஏற்றுவதில் தகராறு; ஆட்டோ டிரைவர் கைது

பயணிகளை ஏற்றுவதில் தகராறில் ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார். எஸ்.எஸ். காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து மோகனை கைது செய்தனர்.

மாலை மலர்

மதுரை

மதுரை பைபாஸ் ரோடு நேரு நகர் மருதுபாண்டியன் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் ஷாஜகான் 38, ஆட்டோ டிரைவர். மதுரை பாத்திமா நகர் விருமாண்டி மகன் மோகன் என்ற அரசு. இவரும் ஆட்டோ டிரைவர். இவர்கள் இருவருக்கும் ஆட்டோவில் பயணிகளை ஏற்றுவதில் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்தது. இந்த நிலையில், சம்பவத்தன்று பைபாஸ் ரோட்டில் டீக்கடை முன்பாக இருவரும் நின்றபோது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் ஷாஜகானின் கைவிரலை மோகன் பலமாக கடித்து காயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து எஸ்.எஸ். காலனி போலீசில் ஷாஜகான் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மோகனை கைது செய்தனர்.