மாநகராட்சி துணைமேயர் 
உள்ளூர் செய்திகள்

தி.மு.க. கூட்டணி கட்சிக்கு துணை மேயர் பதவி?

மதுரை மாநகராட்சியில் தி.மு.க. கூட்டணி கட்சிக்கு துணை மேயர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாலை மலர்

மதுரை

மதுரை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. கடந்த 19ந்தேதி நடந்த தேர்தலில் 100 வார்டுகளுக்கும் மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி 80 வார்டுகளை கைப்பற்றி அறுதி  பெரும்பான்மையை பெற்றுள்ளது. அ.தி.மு.க. 15 வார்டுகளையும், பா.ஜனதா ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளது. 4 வார்டுகளில் சுயேட்சைகள் வெற்றி பெற்றுள்ளனர்.

மதுரை மாநகராட்சி மேயர் பதவி உள்ளிட்ட நியமன பதவிகளுக்கு மறைமுக தேர்தல் வருகிற 4ந்தேதி நடைபெறுகிறது. மாநகராட்சியை பொறுத்தவரை மேயர் பதவி பொதுப்பிரிவில் பெண்ணுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் தி.மு.க.வை சேர்ந்த பெண் கவுன்சிலர் ஒருவர் மேயராக தேர்வு ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே தி.மு.க. பெண் கவுன்சிலர்கள் மேயர் போட்டியில் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

மேயருக்கு அடுத்தப்படியாக துணை மேயர் மற்றும் மண்டல தலைவர்கள், குழு தலைவர்கள் பதவிகளுக்கு தி.மு.க. கூட்டணியில் பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த பதவிகளை பிடிக்க முக்கியமான கவுன்சிலர்கள் சென்னையில் முகாமிட்டு வியூகம் வகுத்து வருகிறார்கள். 

துணை மேயர் பதவியை பொருத்தவரை தி.மு.க.வில் பல கவுன்சிலர்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. மேலும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தை ஆகிய கட்சிகள் துணைமேயர் பதவியை கேட்டு தி.மு.க. மேலிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. 

மண்டல தலைவர்கள் மற்றும் குழு தலைவர்கள் பொறுப்புகளையும் ஒதுக்கீடு செய்ய கூட்டணி கட்சிகள் தொடர்ந்து தி.மு.க. மேலிடத்திடம் பேசி வருகிறது. இதனால் துணை மேயர் பதவி தி.மு.க.வுக்கு கிடைக்குமா? அல்லது அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் அல்லது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு துணைமேயர் ரேசில் முந்துமா? என்ற பரபரப்பு தற்போது எழுந்துள்ளது. 

5 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் மதுரை மாநகராட்சி துணை மேயர் பதவியை பெற தீவிரமாக முயற்சி செய்துவருகிறது. அதேநேரத்தில் 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் துணை மேயர் பதவியை குறிவைத்து காய்நகர்த்தி வருகிறது. 

எனவே துணை மேயர் பதவியை காங்கிரஸ் அல்லது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்குவது குறித்து தி.மு.க. மேலிடம் தீவிரமாக பரிசீலனை செய்து வருவதாகவும் தெரியவந்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு  கட்சியின் சார்பில் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன், தி.மு.க. மேலிடத்தில் பேசி வருகிறார். 

அதே வேளையில் காங்கிரஸ் கட்சிக்கு துணை மேயர் பதவியை கேட்டு மாநிலதலைவர் கே.எஸ்.அழகிரி, திருநாவுக்கரசர் எம்.பி ஆகியோர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். எனவே மதுரை மாநகராட்சி துணை மேயர் பதவியை கூட்டணி  கட்சிக்கு தி.மு.க. விட்டுக்கொடுக்குமா? என்பது ஓரிருநாளில் தெரிந்துவிடும்.

இதனிடையே 15 வார்டுகளை கைப்பற்றியுள்ள அ.தி.மு.க.வுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்குமா? என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. 100 உறுப்பினர்களைக்கொண்ட மாநகராட்சியில் எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு எத்தனை கவுன்சிலர்கள் தேவை என்ற விதிமுறைகள் உள்ளாட்சி தேர்தல் ஆணையத்தில் வரையறுக்கப்பட்டு உள்ளதாகவும், அதற்கான அதிகாரபூர்வ தகவல் இன்னும் கிடைக்கவில்லை என்றும் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 

எனவே 15 உறுப்பினர்களைக்கொண்ட அ.தி.மு.க.வுக்கு மதுரை மாநகராட்சியின் எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்குமா? என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.