மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சத்தியபுரத்தைச் சேர்ந்தவர் கோபி (வயது 27). இவரது மனைவி கவுசல்யா. இவர்களுக்கு ஒரு வயதில் யுவா என்ற மகன் உள்ளார்.
வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த கோபி கொரோனா காரணமாக சி ல மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்திருந்தார். இவர் தனது தாய் இந்திரா, சகோதரி இந்து மற்றும் மனைவி, மகனுடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறார்.
நேற்று இரவு கோபி தனது மனைவி, மகனுடன் ஒரு அறையிலும், மற்றவர்கள் வேறு ஒரு அறையிலும் தூங்கினர். இவர்களது வீடு மேலூர் 4 வழிச்சாலையோரத்தில் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் ஆள் நடமாட்டம் முற்றிலும் இருக்காது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் மாஸ்க் அணிந்து 4 பேர் கொண்ட மர்ம நபர்கள் வீட்டின் இரும்பு கிரில் கேட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். இதனால் திடுக்கிட்டு எழுந்த கோபி மற்றும் குடும்பத்தினர் சுதாரிப்பதற்குள் மர்ம கும்பல் கத்தி, அரிவாளால் அவர்களை மிரட்டினார்கள்.
கூச்சல் போட்டால் குழந்தையை கொன்றுவிடுவோம் என கூறியதால் குடும்பத்தினர் அதிர்ச்சிக்குள்ளாகினர். இதனைத் தொடர்ந்து கொள்ளை கும்பல் கோபி உள்பட 7 பேரை ஒரு அறையில் வைத்து பூட்டினார்கள்.
பின்னர் அந்த கும்பல் வீட்டின் பீரோவை உடைத்து அதில் இருந்த 75 பவுன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கம், வெள்ளி பொருட்களை கொள்ளையடித்தனர்.
தொடர்ந்து அந்த கும்பல் வீடு முழுவதும் சல்லடை போட்டு கிடைத்த பொருட்களை எல்லாம் அள்ளியது. பின்னர் அந்த கும்பல் வீட்டின் பெண்கள் அணிந்திருந்த நகையையும் பறித்துக் கொண்டு தாங்கள் வந்திருந்த காரில் தப்பிச் சென்றனர்.
அதன் பின் கோபி நடந்த சம்பவம் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேலூர் டி.எஸ்.பி. (பொறுப்பு) ராதாகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் சார்லஸ் மற்றும் போலீசார் கொள்ளை குறித்து விசாரணை நடத்தினர்.
தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மர்ம கும்பலின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. மோப்ப நாயும் வர வழைக்கப்பட்டது. கொள்ளையர்களை பிடிக்க ஏ.டி.எஸ்.பி. ராஜமவுலி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
மேலூர் 4 வழிச்சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாததை அறிந்து மர்ம கும்பல் கைவரிசை காட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளையர்கள் பல நாட்கள் திட்டமிட்டு இந்த கொள்ளையை அரங்கேற்றி இருக்கலாம் என தெரிகிறது.
நடிகர் கார்த்தி நடித்த “தீரன்” படத்தில் வடமாநில கொள்ளையர்கள் வீட்டுக்குள் புகுந்து அங்கிருப்பவர்களை சரமாரியாக தாக்கி கொள்ளையடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கும். அதே போன்று மேலூரில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது அந்தப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.