கைதான கொள்ளையர்களையும், அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்களையும் படத்தில் காணலாம். 
உள்ளூர் செய்திகள்

மதுரையில் ஆயுதங்களுடன் பதுங்கிய இருந்த 7 கொள்ளையர்கள் கைது

மதுரை வைகை ஆற்றில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 7 கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் வாகனத்தில் வருபவர்களிடம் வழிப்பறியில் ஈடுபடுவதற்காக பதுங்கியிருந்த அதிர்ச்சி தகவல் வெளியானது.

மதுரை

மதுரை ஆரப்பாளையம் வைகை ஆற்றின் தென்கரை பகுதியில்  10-க்கும் மேற்பட்ட  ரவுடிகள்   ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு   தகவல் வந்தது. இந்த  குற்ற வாளிகளை  கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டார். 

அதன்படி மதுரை தெற்கு துணை கமிஷனர் தங்கதுரை மேற்பார்வையில், திலகர் திடல் உதவி கமிஷனர் பழனிகுமார் ஆலோசனையின் பேரில், இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்தை சுற்றிவளைத்து  தேடுதல் வேட்டை நடத்தினர். 

வைகை ஆற்றில்  பதுங்கி இருந்த 7 பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர்.   போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.  அவர்களிடம் கத்தி, அரிவாள்  போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

போலீசார்  7 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.  அவர்கள் ஆரப்பாளையம் மோதிலால் மெயின்ரோடு  ஜாக்கி என்ற பிரசாந்த் (வயது 22),   கலை என்கிற முத்துகிருஷ்ணன் (23), தெற்கு வாசல் சப்பாணி கோவில் தெரு  பொன்மணி (19), பெத்தானியாபுரம் நாகம்மாள் கோவில் தெரு   நவீன் பிரசாத் (19), ஆரப் பாளையம் ஜே.ஜே. ரோடு   கல்விநாயகன் என்ற சந்தோஷ் (19), திடீர்நகர்  காவேரிமணி என்ற சதீஷ் (19), முரட்டன்பத்திரி அஜித்குமார் (25) என்பது தெரியவந்தது.

இவர்களில் ஜாக்கி என்ற பிரசாந்த் எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலைய  ரவுடி பட்டியலில் உள்ளார்.   மற்ற 6 பேர் மீதும் மாநகர போலீஸ் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கொள்ளை கும்பலுக்கு பணத்தேவை அதிகம் இருந்தது. அவர்கள் வைகை ஆற்றுக்குள் பதுங்கி இருந்து இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் செல்லும் வாகன ஓட்டிகளை கத்தி முனையில் வழிமறித்து,   பணம் மற்றும் தங்க நகைகளை பறிக்க திட்டமிட்டது தெரியவந்தது. 

இதையடுத்து  7 பேரையும் கரிமேடு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையடிக்க பதுங்கி இருந்த 7 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT