உள்ளூர் செய்திகள்

ஆடி களரி திருவிழா: 100 ஆடுகள் பலியிட்டு அசைவ விருந்து

மேலூர் அருகே ஆடி களரி திருவிழா 100 ஆடுகள் பலியிட்டு அசைவ விருந்து நடந்தது. மக்கள் நோய் நொடி இன்றி வாழவும், விவசாயம் செழிக்கும் என்பதும் இவர்களின் நம்பிக்கை.

மேலூர்

மேலூர் அருகே உள்ள சின்ன சூரக்குண்டு கிராமத்தில் அமைந்திருக்கும் பட்டசாமி கோவிலின் களரி திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழா கடந்த 8 ஆண்டுகளுக்கு பின்பு நடந்தது. இதில் சோனை கூட்ட பங்காளிகள் கடந்த ஒரு வாரமாக விரதம் இருந்து வந்தனர். கோவில் முன்பு அமைந்திருக்கும் மிக பழமையான ஆத்திமரத்தில் பொங்கல் வைத்தனர். அதனைத் தொடர்ந்து கோவிலின் சார்பிலும் மற்றும் நேர்த்திக்கடன் வேண்டியவர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட கிடா ஆடுகளை பலியிட்டனர். சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 3000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று அசைவ விருந்து சாப்பிட்டனர். இந்த திருவிழா நடைபெறுவதன் மூலம் மக்கள் நோய் நொடி இன்றி வாழவும், விவசாயம் செழிக்கும் என்பதும் இவர்களின் நம்பிக்கை.